டெல்லி அவசர சட்டம்:


ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் டெல்லி அரசுக்கும் மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்தது. அதை தீர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


இந்த சட்ட போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், சட்டத்தை இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டப்பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது. 


இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, டெல்லி அரசில் அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் மீண்டும் துணை ஆளுநருக்கு வழங்கப்பட்டது.


உச்ச நீதிமன்ற தீர்ப்பு:


உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மாநில அரசின் அதிகாரங்களை நிலைநாட்டிய நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம், டெல்லி அரசுக்கு பேரிடியாக அமைந்தது. இந்த சூழலில், அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


இந்த நிலையில், இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாத சமையத்தில் தான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், நாடாளுமன்றம் மீண்டும் கூடிய ஆறு வாரங்களுக்குள் அவசர சட்டத்தை மசோதாவாக கொண்டு வந்து சட்டமாக நிறைவேற்றி, அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அந்த வகையில் இன்று இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.  


டெல்லி அவசர சட்டத்துக்கு எதிரான மசோதா:


இப்படி இருக்கும் சூழலில், நாடாளுமன்றத்தில் அவசர சட்டத்துக்கு மாற்றாக மசோதா உருவாக்கப்பட்டு நாடாமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி தரப்பில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். மாநிலங்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்யும் போது அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தவறாது வந்து வாக்களிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


முக்கியமாக காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கட்டாயம் வர வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் உடல்நிலை சரியில்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வர ஆம்புலன்ஸ் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் 109 உறுப்பினர்கள் உள்ளனர், மேலும் கபில்சிபில் உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் தரப்பில் அவசர சட்டத்துக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.