Fishermen Arrest: 9 தமிழக மீனவர்கள் கைது.. வீணானதா விக்கிரமசிங்க வருகை..? என்ன செய்யப்போகிறார் இந்திய பிரதமர்?

பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு கடிதங்கள் அனுப்பப்பட்டபோதிலும், கைதும் விடுதலையுமாய் மீனவர்களின் வாழ்க்கை நகர்ந்துகொண்டே போகிறது. முடிவு மட்டும் எட்டப்படவில்லை. 

Continues below advertisement

தமிழ்நாட்டை சேர்ந்த 9 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு கடிதங்கள் அனுப்பப்பட்டபோதிலும், கைதும் விடுதலையுமாய் மீனவர்களின் வாழ்க்கை நகர்ந்துகொண்டே போகிறது. முடிவு மட்டும் எட்டப்படவில்லை. 

இந்தநிலையில், இலங்கை நெடுந்தீவு பகுதியில் எல்லை கடந்து மீன் பிடித்ததாக தெரிவித்து தமிழ்நாட்டை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்திய 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கைது சம்பவம் தமிழ்நாடு மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக கூட மீனவர் பிரச்னை சம்பந்தமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கை கவனத்தில் எடுக்கப்படும் என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

என்ன ஆனது அதிபர் ரணில் விக்கிரமசிங்க - பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..? 

இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்த இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின்போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதில், இலங்கையில் யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேம்படுத்தல், சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்திற்கான எரிசக்தி அனுமதிப் பத்திரம், தலைமன்னார் - இராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான படகுச் சேவைகள் என பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய மோடி, “ மீனவர்கள் பிரச்னையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும். இலங்கை அரசு தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றி சமாதானம், நீதி மற்றும் அமைதிக்கான நடவடிக்கை முன்னெடுக்கும் என நம்புகிறோம்” என தெரிவித்தார். 

இப்படியான கருத்துகளை மோடி கூறி இன்னும் முழுசாக இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில், மீண்டும் இன்று 9 தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Continues below advertisement