நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று பிரதமர் பதிலளிக்க உள்ளார் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் அறிவித்தார். கடந்த 2 நாட்களாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதங்கள் நடைபெற்ற நிலையில் இன்று அதற்கான பதில் உரையை அளிக்கிறார் பிரதமர் மோடி.
நம்பிக்கையில்லா தீர்மானம்:
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தரப்பில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டு வந்த நிலையில் அதனை பிரதமர் மோடி கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டி, அதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து இதற்கான நோட்டீஸ் எதிர்க்கட்சிகள் தரப்பில் வழங்கப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதங்கள் பற்றி சபாநாயகர் அறிவிக்காமல் இருப்பதை எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் 8 ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார்.
நாடாளுமன்றத்தில் காட்டம் காட்டிய ராகுல் காந்தி:
நேற்றைய தினம் இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “இந்த நாட்டில் இருக்கும் வெறுப்பு வாதத்தை நீக்க வேண்டும். நான் சில தினங்களுக்கு முன் மணிப்பூர் சென்று இருந்தேன். ஆனால் இன்று வரை நாட்டின் பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லவில்லை. ஏனென்றால் அவருக்கு மணிப்பூர் இந்தியாவில் இல்லை. மணிப்பூரின் நிலை இன்று வரை சரி செய்யப்படவில்லை.
மணிப்பூரை இரண்டாக பிளந்துள்ளனர். சுக்குநூறாக உடைத்துவிட்டனர். மணிப்பூரில் இருக்கும் நிவாரண முகாமிற்கு நான் சென்ற போது, அங்கு இருக்கும் பெண்களை, குழந்தைகளை சந்தித்து பேசினேன். அதனை இன்றுவரை பிரதமர் செய்யவில்லை. அதில் ஒரு பெண், தன் குழந்தையை தனது கண்முன்னே சுட்டுக்கொன்றதாக கூறினார். அவரிடம் அனைத்தையும் இழந்து நிற்கதியாக நின்றார். இந்தியா அனைவருக்குமான வீடு, மக்களில் குரலை பிரதிபளிக்கும் தேசமாக இந்தியா உள்ளது. ஆனால் அது தற்போது மகப்பெரிய கேள்விக்குரியா மாறியுள்ளது” என மிகவும் காட்டமாக பேசினார்.
பதிலுரை அளித்த ஸ்மிருதி இரானி:
ராகுல் காந்தி உரைக்கு பதிலுரை அளித்த ஸ்மிருதி இரானி, “மணிப்பூர் நமது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. மணிப்பூர் ஒருபோதும் பிரிக்கப்படவில்லை. இனியும் இருக்காது. இன்றைய விவாதத்தில் மிகவும் மோசமான பேச்சை இங்கு கேட்டோம். இந்தியாவுக்கு ஊழலை அறிமுகம் செய்ததே காங்கிரஸ் தான். ஊழலை பற்றி பேசும் காங்கிரஸ் முதலில் அவர்கள் கூட்டணியில் இருக்கும் திமுகவினரை பார்க்க வேண்டும். ஊழல், வாரிசு அரசியலுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். காஷ்மீர் பண்டிட்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக காங்கிரஸ் தரப்பில் என்ன செய்யப்பட்டது? ” என மிகவும் ஆவேசமாக பதிலளுத்தார்.
நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி:
இப்படி காரசாரமாக நடைபெற்ற விவாதங்களுக்கு மத்தியில் இன்று மூன்றாவது நாளாக மத்திய அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது. ஜூலை மாதம் தொடங்கிய நாடாளுமன்றத்திற்கு இதுவரை ஒரு நாள் கூட பிரதமர் மோடி வரவில்லை. எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையே பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் இன்று அவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதில் அளிப்பார் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் அறிவித்துள்ளார். இதனால் இன்று மோடி பேசப்போவது என்ன? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.