பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கொரோனா  ஊரடங்கினால் பாலியல் தொழிலாளர்கள் உணவின்றி கடுமையாக பாதிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இது தொடர்பாக, கடந்த மார்ச் மாதம், மாநில சுகாதார அதிகாரியிடமிருந்தோ, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பிடமிருந்தோ சான்றிதழ் பெறும்பட்சத்தில் பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்கத் தயாராக உள்ளதாக UIDAI (Unique Identification Authority of India) நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. 


பாலியல் தொழிலாளர்களுக்கு அரசின் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு நீதிபதி நாகேஸ்வரராவ், பி.ஆர் கவாய் மற்றும் ஏ.எஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இதில் தமிழகத்தில் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்களை அடையாளம் காணப்பட்டு அவர்களில் 86,000 க்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் கார்டுகளை வழங்கியுள்ளது போல அனைத்து மாநிலங்களும் பாலியல் தொழிலாளர்களுக்கு உரிய உணவு கிடைக்கும் வகையில் ரேஷன் அடையாள அட்டை வழங்க வேண்டும் என நீதிபதிகள் கூறியிருந்தனர். யாரையும் தொழிலின் அடிப்படையில் பிரித்துப் பார்க்க முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். 


வழக்கின் முந்தைய விசாரணைகளின் போது, அரசு அதிகாரிகள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகள் பாலியல் தொழிலாளர்களை அணுகுதல்,  அவர்களின் அடையாளங்கள் குறித்த தகவல்களை வெளியிடாமல் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை வழங்குவது என்பது குறித்த வாதங்களை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.


”ஆதார் அட்டை இல்லாததால்,  பலருக்கும் உணவு போன்ற அடிப்படை உரிமைகள் கிடைக்காமல் இருப்பதை தடுப்பதை உறுதி செய்யவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது” என்று ஆதார் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார்.


பாலியல் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள மசோதாவின் நிலை குறித்து மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புகளால் அடையாளம் காணப்பட்ட பாலியல் தொழிலாளர்களின் பட்டியல்களை சரிபார்த்த பிறகு அவர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் அடையாளத்தை வலியுறுத்தாமல், மாநில அரசுகள் தொடர்ந்து உணவுகளை விநியோகிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.


கொரோனா காலகட்டத்தில் அதிக பாதிப்புக்கு உள்ளானவர்கள் பட்டியலில், பாலியல் தொழிலாளர்களும் உள்ளனர். இவர்களின் பாதுகாப்பு `கேள்விக்குறியாகவே உள்ளது' என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பாலியல் தொழிலாளர்களின் தொழில் குறித்த தகவல்களை, மற்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களையும் ரகசியமாக வைத்திருப்பது முக்கியம் என்று கூறி இருந்தனர். குறிப்பாக NACO (National AIDS Control Organisation) மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புகளால் அடையாளம் காணப்பட்ட பாலியல் தொழிலாளர்களின் பட்டியல்களை சரிபார்த்த பிறகு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்றும் பாலியல் தொழிலாளர்களின் அடையாளத்தை தெரிவிக்காமல் மாநில அரசுகள் தொடர்ந்து ரேஷன் உணவுகளை விநியோகிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.


 நீதிபதிகள் அமர்வு, ”பாலியல் தொழிலாளர்கள் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் மற்றும் அவர்கள் அனைவருக்கும் அதற்கான உரிமை உள்ளது என்ற அடிப்படையில், பாலியல் தொழிலாளர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது.


கொரோனா பாதிப்பின்போது இந்தியாவில் 9 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நீதிமன்றம் அறிகிறது. அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும்” என தீர்ப்பளித்தனர்.


இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.