கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெண்டாபுடி ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குழு, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அவரது முகாம் அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்தனர். முதலமைச்சருடன் உரையாடிய அவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நாடு நெடு திட்டம், ஆங்கிலம் பயிற்றுவித்தல் போன்ற திட்டங்கள் மிகவும் சிறப்பானவை என அவர்கள் தெரிவித்தனர். முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் ஆங்கிலத்தில் உரையாடும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது





முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் பேசிய 10ஆம் வகுப்பு மாணவி மேனகா, நீங்கள் கொண்டு வந்துள்ள அம்மாவாரி திட்டம் ஏழை குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப உதவுகிறது. 15000 ரூபாய் நேரடியாக மாணவரின் தாயின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. என்னிடம் தனித்த திறன்கள் ஏதுமில்லை, நான் வகுப்பில் சராசரி மாணவி, நான் கூச்சசுபாவமுள்ளவள், ஆனால் என் பயிற்சியாளர்கள் என்னுள் மறைந்திருந்த திறன்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர். அமெரிக்க பாணியில் ஆங்கிலம் பேசும் வண்ணம் எனக்கு பயிற்சி கொடுத்துள்ளனர். மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். 


கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அமலான ஆங்கில வழிக்கல்வி


கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் அந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்ட அறிவிப்பில், அரசுப்பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்புகளிலும் ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். இதன்படி 2020-21ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும், 2021-22 கல்வியாண்டில் 9 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலும் ஆங்கில கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்த இந்த திட்டத்திற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு எழுந்தது, அரசுப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியை மட்டும் கொண்டுவரும் திட்டம் தெலுங்கு மொழியை அழிக்கும் என துணைக்குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர். 



வெங்கயநாயுடு - சந்திரபாபு நாயுடு- பவன் கல்யாண்


உங்கள் மகனும், பேரன்களும் என்ன மீடியத்தில் படிக்கிறார்கள்? 


இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, சார், சந்திரபாபு அவர்களே, உங்கள் மகன் எந்த மீடியத்தில் படித்தார்? நாளை உங்கள் பேரன் எந்த மீடியத்தில் படிக்கிறார்? ஐயா, வெங்கையா நாயுடு அவர்களே, உங்கள் மகனும் பேரன்களும் எந்த மீடியத்தில் படித்தார்கள்?" என கேட்டார். இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் அரசு கொண்டு வந்துள்ள ஆங்கில மொழித் திட்டத்தை தெலுங்கு தேசம் கட்சி ஏற்றுக்கொள்வதாக சந்திரபாபு நாயுடு ஸ்டண்ட் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மொழிவாரியாக மாநில பிரிவினை கோரி அதில் வென்று காட்டிய ஆந்திர பிரதேசம் தற்போது இந்தியாவிலேயே முதன்முறையாக அரசுப்பள்ளிகள் ஆங்கில வழிக்கல்வியை செயல்படுத்திக்காடி ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.