சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் அறிவியல் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






சந்திரயான் 3:


நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 40 நாட்களில் பல ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி தரையிறங்கியது சந்திரயான் 3 விண்கலம்.


இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அதேநேரம், நிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியா பெற்றுள்ளது. 


மூன் வாக் செய்யும் ரோவர்:


நிலவில் தரையிறங்கிய பின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் கால்தடம் பதித்தது. பின் பிரக்யான் ரோவர் நிலவில் மூன் வாக் செய்யும் காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டது.  தற்போது பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. நிலவு தொடர்பாக இதுவரை அறியப்படாத பல்வேறு தகவல்களை சந்திரயான் 3 வழங்கும் என்பதோடு, சந்திரனின் மிகவும் மதிப்புமிக்க வளங்களில் ஒன்றான நீர் பனி பற்றிய ஏராளமான தகவல்கள் தென் துருவத்தில் இருந்து கிடைக்கப்பெறலாம் என்பதே இத்திட்டத்தின் மீதான மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும்.


இதன் காரணமாகவே விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும்,  தனியார் நிறுவனங்களும், நிலவின் வளங்கள் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கான சாத்தியமான பயணங்களுக்கான திறவுகோலாக சந்திரயான் 3 வெற்றியை பார்க்கின்றன.


3 இலக்குகள்:


இந்நிலையில் சந்திரயான் 3  விண்கலம் மூன்று இலக்குகளை கொண்டு செயல்படுவதாகவும், அதில் தற்போது வரை இரண்டு இலக்குகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் soft landing எனப்படும் மென்மையான தரையிறக்கம் முதல் இலக்கு, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி ஊர்ந்து செல்வது இரண்டாவது இலக்கு, அறிவியல் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது மூன்றாவது இலக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதில் முதல் இரண்டு இலக்குகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. மூன்றாவது இலக்கான அறிவியல் ஆய்வுப்பணிகளை பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் மேற்கொண்டு வருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.