விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் நாடுகளையுமே ஆச்சரியப்படுத்தும் வகையில், திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெற்றிகரமாக தரையிறக்கியது.


இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. விண்வெளி ஆராச்ச்சியில் இந்தியாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்த சென்ற சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் இஸ்ரோ தலைவரும் விண்வெளி பொறியாளருமான எஸ். சோமநாத்.


சாதித்து காட்டிய கிராமத்து சிறுவன்: சிறிய கிராமத்தில் பிறந்து உலக நாடுகளை இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்த சோம்நாத்துக்கு மற்றொரு மகுடமாய் இன்று PhD பட்டம் கிடைத்துள்ளது. ஐஐடி மெட்ராஸில் இன்று நடந்த 61ஆவது பட்டமளிப்பு விழாவில் அவருக்கு PhD பட்டம் வழங்கப்பட்டுள்ளது.


சோம்நாத்துக்கு ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட முறை கெளரவ PhD பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், ஆராய்ச்சி படிப்புக்காக முதல்முறையாக PhD பட்டம் பெறுவது அவருக்கு மேலும் அங்கீகாரமாக மாறியுள்ளது. பட்டம் பெற்ற பிறகு நெகிழ்ச்சியாக பேசிய சோம்நாத், "கிராமத்து பையனாக, டாப்பராக இருந்தாலும், ஐஐடி நுழைவுத் தேர்வில் எழுதும் தைரியம் எனக்கு இல்லை.


ஆனால், ஒரு நாள் நான் இங்கிருந்து பட்டம் பெறுவேன் என்று கனவு கண்டேன். பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற இந்திய அறிவியல் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றேன். இப்போது ஐஐடி-மெட்ராஸில் பிஎச்டி கிடைத்துள்ளது" என்றார்.


ஐஐடி மெட்ராஸில் PhD பெற்ற இஸ்ரோ தலைவர் சோம்நாத்: தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "குறிப்பாக ஐஐடி-மெட்ராஸ் போன்ற புகழ்பெற்ற நிறுவனத்தில் இருந்து பிஎச்டி பெறுவது என்பது சுலபமான காரியம் அல்ல. இது ஒரு நீண்ட பயணம். நான் பல ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்த போதிலும், ஆராய்ச்சியே எனது மனதுக்கு நெருக்கமாக இருந்தது. 


வைப்ரேஷன் ஐசோலேட்டர் தொடர்பான ஆராய்ச்சின் மீது ஆர்வம் இருந்தது. எனவேதான், பல ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரோ திட்டத்தில் பொறியாளராக வாழ்க்கையை தொடங்கினேன். என் மனதில் அந்த தலைப்பு உயிர்ப்புடன் இருந்தது. நான் பல ஆண்டுகளாக அது தொடர்பாக வேலை செய்தேன்.


கடந்த 35 ஆண்டு காலமாக செய்த பணி, கடைசிக் கட்டப் பணியின்போது எடுத்த முயற்சிகளை பிஎச்டியாக மாற்றி ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவது, கருத்தரங்குகளில் கலந்துகொண்டது, அதன் பலன்தான் இந்தப் பிஎச்டி என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். நீங்கள் கடைசி கட்டத்தை மட்டுமே பார்க்கிறீர்கள், ஆனால் இது ஒரு நீண்ட பயணம்" என்றார்.