பல மோசடிகளை செய்து, IAS தேர்வில் வெற்றி பெற்ற பூஜா கேத்கரின் பணி ஆணையை ரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் எதிர்காலத்தில் தேர்வு எழுத முடியாதபடியான நடவடிக்கையையும் எடுத்துள்ளது.
சர்ச்சையில் சிக்கிய பயிற்சி IAS அதிகாரி:
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று , மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பயிற்சி பெற்று வரும் பூஜா கேத்கருக்கு எதிராக மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கியதை தொடர்ந்து, அவருக்கு சிக்கல் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.
கேத்கர் தனது தனிப்பட்ட ஆடி காரில் சைரனைப் பயன்படுத்தியது, பயிற்சி அதிகாரிகளுக்குக் கிடைக்காத தனி வீடு மற்றும் கார் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கோரிக்கைகளை எழுப்பியது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளானது இவர் மீது எழுந்தது.
மோசடி:
இதையடுத்து, இவர் இதற்கு முன்பு போலிச் சாதிச் சான்றிதழ் கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. மேலும், தனக்கு பார்வைத்திறனில் குறைபாடு இருப்பதாக கூறி, அதற்கான இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன. பார்வை குறைபாடுகளை உறுதி செய்வதற்காக கட்டாய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள கேத்கர் மறுத்துவிட்டார் விட்டார் என்றும் கூறப்படுகிறது.
இவரது தந்தை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும் தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில், இந்த சர்ச்சையானது, இந்தியா முழுவதும் பரவி, யுபிஎஸ்சி தேர்வு மூலம் அதிகாரிகள் தேர்வு செய்யப்படும் முறை குறித்து, பலர் கேள்விகள் எழுப்ப ஆரம்பித்தனர்.
யுபிஎஸ்சி நடவடிக்கை:
2022 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்வான பூஜா மனோரமா திலீப் கேத்கரின் தவறான நடத்தை குறித்து யுபிஎஸ்சி விரிவான மற்றும் முழுமையான விசாரணையை நடத்தியது. இந்த விசாரணையில் அவர் தேர்வு விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. அவரது பெயர், அவரது தந்தை மற்றும் தாயின் பெயர், அவரது புகைப்படம் / கையொப்பம், அவரது மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் மற்றும் முகவரி ஆகியவற்றை மாற்றியும் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது,
பூஜா கேத்கர் சர்ச்சை தொடர்பாக யுபிஎஸ்சி வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கை வெளியிட்டது. சர்ச்சைக்குரிய அதிகாரிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) தாக்கல் செய்துள்ளதாகவும், சிவில் சர்வீசஸ் தேர்வு-2022 இலிருந்து அவரது ஆணை ரத்து செய்வதற்கான காரண நோட்டீஸும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், கேத்கர் எதிர்காலத் தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாதபடியும் தடை செய்யப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.