திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் அமைந்துள்ளது தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இங்கு கடந்த ஞாயிறுக்கிழமை தமிழ்நாடு தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா சார்பில் இந்தி தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுதுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 540 மாணவ- மாணவிகள் இந்த இந்தி தேர்வினை எழுத வந்திருந்தனர்.


இந்த தேர்விற்கு காலை திருவண்ணாமலை அடுத்த தனியார் பள்ளியில் அரபிக் ஆசிரியையாக பணிபுரியும் ஷபானா தேர்வு எழுத வந்துள்ளார். அனுமதி கடிதத்துடன் தேர்வு அறைக்குள் சென்ற ஷபானாவிற்கு கேள்வித்தாள் கொடுக்கப்பட்டு 10 நிமிடங்கள் தேர்வு எழுதிய ஷபானாவை தேர்வு அறை மேற்பார்வையாளர் ஹிஜாப் அணிந்து கொண்டு தேர்வை எழுதக்கூடாது என தெரிவித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ஷபானா, அதிர்ச்சியடைந்த நிலையில் ஹிஜாப் அணிந்து கொண்டுதான் தேர்வை எழுதுவேன் என்று தெரிவித்துள்ளார்.


 




 


அப்போது இருவருக்கும் தேர்வு அறையிலுள்ளே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஷபானாவிடம் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவேன் என்று நீங்கள் சொன்னால் வெளியே சென்று விடுங்கள் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி ஷபானா ஹிஜாப் இஸ்லாமியர்களின் ஓர் அங்கம் என்றும், ஹிஜாப் அணிந்து கொண்டுதான் தேர்வை எழுதுவேன் என்று கூறியுள்ளார்.


தொடர்ந்து தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாத ஷபானா ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுத மாட்டேன் என பள்ளி நிர்வாகத்திடம் கடிதம் ஒன்றை எழுதி கையொப்பம் இட்டு உள்ளார். இதனை அறிந்த எஸ்டிபிஐ மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை நகர டிஎஸ்பி குணசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


 


 




 


ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவியை தேர்வு எழுத விடாமல் மிரட்டும் பாணியில் பேசிய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஷபானா மற்றும் அவரது உறவினர்கள் எஸ்டிபிஐ கட்சி, தமமுக கட்சியினர் என அனைவரும் ஒன்று கூடி ஆட்சியரிடம் பள்ளியின் தாளாளர் மீதும் பிரின்ஸ்பல் மீதும் ஹிந்தி பிரச்சார சபா செக்ரட்டரி மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளியில் இதற்குப் பிறகு தேர்வு மையம் அமைக்க அனுமதி வழங்க கூடாது என புகார் மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பெயரில் ஆட்சியரிடம் இருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


இதுகுறித்து ABP நாடு சார்பில் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது : ”தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா இம்முறை வாய்மொழி உத்தரவாக ஹிஜாப் அணிய கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதே போன்று கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வின் பொழுது அதிக அளவு, மாணவர்கள் மூட்டை மூட்டையாக பிட் பேப்பர்கள் கொண்டு வந்திருந்தார்கள். இதை தடுப்பதற்காகவே, எங்கள் தரப்பிலிருந்து சற்று கடுமையாக நடந்து கொண்டோம்.


' தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா ' சார்பில் கூட எங்களுடைய நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் தெரிவித்திருந்தனர் .


இருந்தும் அந்தப் பெண்மணி இடம் நாங்கள், கூடுதல் நேரம் ஒதுக்கி தருகிறோம். இரண்டு தாள் பேப்பர்களையும் எழுதி விட்டுச் செல்லுங்கள் என கூறினோம் ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள்.” என தெரிவித்தார்.