இஸ்ரேலின் தெற்கு பகுதியில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழு தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. 
சுமார் 5,000 ராக்கெட்டுகளை கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் குழு தெரிவித்துள்ளது. மோதல் வெடித்த சில மணி நேரங்களிலேயே போரை தொடங்கியுள்ளதாகவும் அதில் வெற்றிபெறுவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.


இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு:


இந்த நிலையில், இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிடுகையில், "இஸ்ரேலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் துணை நிற்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.


 






தனிநாடாக இஸ்ரேல் உருவான உடனேயே, அந்நாட்டை இந்தியா அங்கீகரித்த போதிலும், பல ஆண்டுகாலம் இரு நாடுகளுக்கிடையே தூதரக ரீதியான உறவு இல்லாமல் இருந்தது. கடந்த 1992ஆம் ஆண்டு, தூதரக உறவு நிறுவப்பட்ட பிறகுதான்,  தூதரகங்கள் திறக்கப்பட்டது. அதற்கு பிறகும் கூட, நெருக்கமான உறவு இருந்துவிடவில்லை.


கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி அமைத்த பிறகுதான், இரு நாடுகளும் நெருக்கமான உறவை பேண தொடங்கியது. வரலாற்றில் முதல்முறையாக இந்திய பிரதமர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூலை மாதம், டெல் அவிவ் நகருக்கு பிரதமர் மோடி கொண்டார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பாலஸ்தீன நகருக்கு செல்லாமல் அவர் தவிர்த்ததுதான்.


உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்:


இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேத்தில் உள்ள அல் அக்ஸா மசூதியை அடையாளம் தெரியாத இஸ்ரேலியர்கள் சேதப்படுத்தியதே ஹமாஸ் படை தாக்குதல் நடத்த காரணமாக அமைந்தது என ஹமாஸ் ரகசிய ராணுவ குழுவின் தலைவர் முகமது டெய்ஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த மசூதி, இஸ்லாமியர்களின் புனித தளமாக கருதப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு மட்டும் இன்றி யூதர்களுக்கும் புனித தளமாக கருதப்படுகிறது. 


காசா-இஸ்ரேல் எல்லை பகுதியில் கடந்த சில வாரங்களாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனியர்கள் பலூன் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக வான்படை தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. ஆனால், இது பெரிய பிரச்னையாக வெடிக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படாமல் இருந்தது. இச்சூழலில்தான், அல் அக்ஸா மசூதி சேதப்படுத்தப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.