MEITY Notice: குழந்தைகள் தொடர்பான ஆபாச  சித்தரிப்பு, புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை நீக்கக்கோரி சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள்:


பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் சமீப காலமாக, இம்மாதிரியான கொடூர சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தென் மாநிலங்களை காட்டிலும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இம்மாதிரியான சம்பவங்கள் அதிக அளவில் பதிவாகி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


அந்த வகையில், பெண்கள் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களை தடுக்க மத்திய அரசு கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது. இருந்த போதிலும் இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்த கொடூர சம்பவங்கள் அதிகரிப்பதற்கு சமூக வலைதளங்களில் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களே காரணம் என தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.


சாட்டையை சுழற்றிய மத்திய அரசு:


இந்த நிலையில், குழந்தைகள் தொடர்பான ஆபாச  சித்தரிப்பு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை நீக்க யூடியூப், ட்விட்டர் (எக்ஸ்), டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், "இந்திய இணையங்களில் தீங்கு விளைவிக்கும், குற்றத்தை ஊக்குவிக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் இருப்பதை சகித்து கொள்ள முடியாது. இதற்கு எதிராக சமூக வலைதளங்கள் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு இதிலிருந்து பாதுகாப்பு தரும் ஐடி சட்டப்பிரிவு 79 திரும்ப பெற்றுக்கொள்ளப்படும்.






ட்விட்டர் (எக்ஸ்) வலைதளம்,  டெலிகிராம், யூடியூப் உள்ளிட்டவற்றில் இருந்து குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வகையிலான புகைப்படங்கள், வீடியோக்களை நீக்க வேண்டும். அதற்கான நோட்டீஸ் சமூக வலைதளங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் பாதுகாப்பான, நம்பகத்தன்மையான இணையத்தை கட்டமைப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்மாதிரியான தீங்கு விளைவிக்கும் குற்றத்தை தூண்டும் வகையிலான பதிவுகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என ஐடி சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இது மாதிரியான விவகாரத்தில் சமூக வலைதளங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஐடி சட்ட பிரிவு 79 திரும்ப பெற்றுக் கொள்ளப்படும்” என்றார்.