பாஜகவுக்கு ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பெரும் உத்வேகத்தை தந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்த நிலையில், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அடுத்த பெரிய சவாலுக்கு தயாராகியுள்ளது பாஜக.
பாஜக ஆலோசனை கூட்டம்:
கடந்த 2 மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தயார் பணிகளை பாஜக ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று பாஜக மூத்த தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் சுனில் பன்சால், மத்திய அமைச்சர்கள் பூபேந்தர் யாதவ், அஷ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் பின்பற்றிய வியூகத்தை மக்களவை தேர்தலில் பின்பற்ற பாஜக தலைவர்கள் திட்டமிட்டு வருவதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மூத்த தலைவர்களுக்கு ஆப்பு:
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலை போன்றே மக்களவை தேர்தலில் புதுமுகங்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் பட்சத்தில், சுமார் 100 மூத்த தலைவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA கூட்டணியை உருவாக்கின. இந்த கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்கனவே பீகார், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடந்தன. நான்காவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவை முன்மொழிய வேண்டும் என டெல்லி ஆலோசனை கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார். மம்தாவின் திட்டத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், மம்தாவின் கோரிக்கையை மல்லிகார்ஜுன கார்கே ஏற்க மறுத்துவிட்டார்.