முப்பத்தொன்பது வயதான இந்திய லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா வெள்ளிக்கிழமை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் சமூக ஊடகத்தில் இந்தியாவைப் பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் செய்த ட்வீட்டில் ‘ஆனால்..’என்று விடுபட்டிருந்த தொடரை முடிக்கும் விதமாக பூர்த்தி செய்துள்ளார்.


நாட்டில் தற்போது நடந்து வரும் சில அரசியல்-சமூக- கலாச்சார விஷயங்கள் பிரபலஸ்தர்களையும் கவலைகொள்ளச் செய்து அவர்கள் தங்கள் கருத்துக்களை சூசகமாகவும் பூடகமாகவும் தெரிவித்து வருகின்றனர், கிரிக்கெட் வீரர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ராம நவமி, அனுமன் ஜெயந்தி ஆகிய விழாக்களின் போது நாடெங்கும் பல கசப்பான சம்பவங்கள் நடைபெற்றன. மசூதிகளில் காவிக்கொடி கட்டுவது போன்ற இந்தியாவின் ஒருமைப்பாட்டை குலைக்கும் வகையில் பல சம்பவங்கள் இடம்பெற்று விவாதத்திற்குள்ளாகின.






இந்நிலையில் இர்பான் பதான், தன் சமூக ஊடகப்பக்கத்தில், “என் நாடு, என் அழகான நாடு, இந்த பூமியில் மிகப்பெரிய நாடாக இருக்கக் கூடிய சக்தி வாய்ந்தது ஆனால்.” என்று பதிவிட்டிருந்தார். அந்த ஆனால் என்ற வார்த்தைக்குப் பிறகு இர்பான் பதான் என்ன எண்ணம் வைத்திருந்தார் என்று சொல்லவில்லை.


அதற்கு லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா பதிலளிக்கும் விதமாக கூறும்போது, “என் நாடு, என் அழகான நாடு, பூமியின் மிகச்சிறந்த நாடாக மாறும் சக்தி கொண்டது. அப்படி மாற வேண்டுமென்றால் சிலர் இந்திய அரசியல் சட்டமே தாங்கள் கடைபிடிக்க வேண்டிய முதல் நூல் என்ற வழியில் செல்ல வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.


ராம நவமி மற்றும் ஹனுமன் ஜெயந்தி போன்ற பண்டிகை நாட்களில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களைக் குறித்துதான் இர்பான் பதான், ட்வீட் போட்டார் என்று கருதப்படுகிறது, நெட்டிசன்கள் அப்படியாகத்தான் அதற்குப் பதில் அளித்து வந்தனர்.






ஆனால் அதற்கு பதில் தருமாறு ட்வீட் போட்ட அமித் மிஸ்ரா, இஸ்லாமியர்களை தாக்கியே எழுதி பதிவு இட்டதாக கருதப்படுகிறது. இர்ஃபான் பதான் ஒரு இஸ்லாமியர் என்ற ரீதியில் அவர் அதற்கு பதில் அளித்து இருந்ததாக கருதப்படுகிறது. தற்போது இர்பான் பதான் ஒரு புதிய ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார். அந்த புகைப்படம் ஜவஹர்லால் நேரு எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரை. அதனை பகிர்ந்த அவர், "நான் எப்போதும் பின்பற்றுவது இதுதான், அத்துடன் இந்திய மக்களாகிய அனைவரையும் இதனை தொடருமாறு வலியுறுத்துகிறேன், தயவுசெய்து படியுங்கள், மீண்டும் ஒருமுறை படியுங்கள்" என்று எழுதியுள்ளார்.






இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையில் நேரு எழுதிய முன்னுரை (தமிழில்):


"இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த, சமதர்ம நெறி சார்ந்த, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும், சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையும், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும், தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும், உறுதியாகக் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிக்கும் உறுதியளிக்கும் உடன் பிறப்புணர்வை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும், விழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு, 1949, நவம்பர் இருபத்து ஆறாம் நாளாகிய இன்று நம்முடைய அரசியலைப்புக் பேரவையில், இந்திய அரசியலமைப்பை ஏற்று, சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்."