Iran Israel Clash: ஈரான் உச்சபட்ச தலைவர் கமெனியின் எச்சரிக்கையை தொடர்ந்து, அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
ஈரான் இஸ்ரேல் மோதல்:
மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல், உச்சகட்டத்தை எட்டியுள்ளன. இடையே அமெரிக்காவும் உள்ளே வந்து, ஈரான் சரணடைய வேண்டும் என தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதையடுத்து இருநாடுகளுக்கு இடையேயான மோதலில் தலையிட்டால், சரிசெய்யமுடியாத பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என அமெரிக்கா மற்றும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு ஈரானின் உச்சபட்ச தலைவர் கமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என விளக்கமளித்துள்ளார்.
ட்ரம்ப் சொல்வது என்ன?
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சியை தடுக்க இஸ்ரேல் உடன் சேர்ந்து அமெரிக்காவும் தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்துமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தபோது,”நான் தாக்குதல் நடத்தலாம், நடத்தாமலும் இருக்கலாம். நான் என்ன செய்யப்போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது” என சூசகமாக பதிலளித்துள்ளார். முன்னதாக, எந்தவித நிபந்தனைகளுமின்றி அமெரிக்காவிடம் சரணடைய வேண்டும் என்ற எச்சரிக்கையையும் ஈரானின் கண்டுகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.
மோடியை மதிக்காத ட்ரம்ப்?
அமெரிக்காவின் அழைப்பை ஈரான் நிராகரித்தது குறித்த கேள்விக்கு, ”இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான போரை நான் நிறுத்தியுள்ளேன். போரை நிறுத்துவதற்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் முக்கிய காரணம்" என்று டிரம்ப் பதிலளித்தார். முன்னதாக, ”இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றே தாக்குதலை நிறுத்தினோம். இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா ஒருபோதும் ஏற்காது. ட்ரம்பின் வணிக எச்சரிக்கைகளை ஏற்று பாகிஸ்தான் உடனான மோதலை நாங்கள் கைவிடவில்லை” என அவரிடமே மோடி தொலைபேசியில் வலியுறுத்தியதாக வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்தது. ஆனால், அதையும் மீறி இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியது தானே என ட்ரம்ப் மீண்டும் பொதுவெளியில் பேசியுள்ளார்.
6வது நாளாக தொடர்ந்த தாக்குதல்கள்:
ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கிய பிறகு, இரு நாடுகளும் ஆறாவது நாளாக தொடர்ந்து மோதலில் ஈடுபட்டன. வாஷிங்டனில் உள்ள ஈரானிய மனித உரிமைக்குழு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 585 பேர் பலியாகி இருப்பதாகவும், 1,300-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மறுபுறம் ஈரான் இதுவரை 400 ஏவுகணைகளையும், நூற்றுக்கணக்கான ட்ரோன்களையும் வீசி தாக்கி உள்ளது. இதனால் இஸ்ரேலில் 24 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. 6-வது நாளான நேற்று ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் மையமும், ஏவுகணை உதிரிபாகங்கள் தயாரிக்கும் இடமும் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. அதேநேரம், சூப்பர்சோனிக் ஏவுகணைகளை கொண்டு, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் அமைப்பின் அலுவலகத்தை தாக்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த விளக்கமும் வரவில்லை.