கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல், தற்போது சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் 40 நாட்களுக்கு மேல் நடைபெறும் இந்த தொடரை, கிரிக்கெட் திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் இந்த தொடரில் பங்கேற்க, பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.


சாதூர்யமாக செயல்பட்ட சென்னை அணி:


அவர்களுக்கான ஏலம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நடப்பாண்டுக்கான ஏலம் இன்று மதியம் 1 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை அணி நிர்வாகம் போட்டி போட்டு கொண்டு எடுத்து வருகிறது.


பொதுவாக, வீரர்களை எடுப்பதில் சாதூர்யமாக செயல்படும் சென்னை அணி நிர்வாகம், இந்த முறையும் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றே சொல்லலாம். பெரும் போட்டிக்கிடையே நியூசிலாந்து அணியை சேர்ந்த டேரில் மிட்செலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.


சர்வதேச ஆட்டங்களில் கலக்கி வரும் டேரில் மிட்செலை வாங்க பல அணிகள் முனைப்பு காட்டின. குறிப்பாக, டெல்லி, பஞ்சாப் அணிகள், போட்டி போட்டு கொண்டன. ஆனால், இறுதியில் யாரும் எதிர்பாராத விதமாக ஏலத்தில் புகுந்த சென்னை அணி, அவரை வாங்கியுள்ளது.


சேப்பாக்கத்தில் மிரட்டப்போகும் டேரில் மிட்செல்:


39 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள டேரில் மிட்செல், 1577 ரன்களை எடுத்துள்ளார். அவரது ஒரு நாள் சராசரி 52.57 ஆகும். அதேபோல, 56 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 1069 ரன்களை எடுத்துள்ளார். 5 முறை அரை சதத்தை எட்டியுள்ளார்.


டேரில் மிட்செலை தவிர்த்து, இந்திய அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூரையும் நியூசிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவை சென்னை அணி வாங்கியுள்ளது.


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராத அளவுக்கு, அதிக விலைக்கு ஏலம் போயுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ். சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அவரை 20.50 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் பட்டேலை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூபாய் 11. 75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. 





பெங்களூர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்காவை 1.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது. ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை 6.8 கோடிக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை 4 கோடிக்கு ஏலம் எடுத்த டெல்லி கேபிடல்ஸ் அணி.


இதையும் படிக்க: IPL 2024 Auction LIVE: 14 கோடிக்கு டேரில் மிட்செல்லை வாங்கியது சி.எஸ்.கே.