கால்லிங் மற்றும் மெசேஜ் சேவைகளை வழங்கி வரும் வாட்ஸ்அப், ஜூம், ஸ்கைப், கூகுள் டியோ ஆகிய நிறுவனங்கள் தங்களின் சேவைகளை இந்தியாவில் தொடர உரிமம் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு மசோதா 2022, வரைவின்படி உரிமம் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


வரைவு மசோதாவில் தொலைத்தொடர்பு சேவையின் ஓர் அங்கமாக OTT செயலிகள் சேர்க்கப்பட்டுள்ளது. "தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளை பெறுவதற்கு நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும்" என வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த மசோதாவில், தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குனர்களின் கட்டணங்கள் மற்றும் அபராதங்களை தள்ளுபடி செய்வதற்கான விதியையும் அரசு முன்மொழிந்துள்ளது. தொலைத்தொடர்பு அல்லது இணைய வழங்குநர் தனது உரிமத்தை ஒப்படைத்தால், கட்டணத்தைத் திரும்பப் பெற்று கொள்வதற்கான ஏற்பாடுகளையும் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.


தொலைத்தொடர்புதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வரைவின் லிங்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022 வரைவு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வரைவு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அக்டோபர் 20 கடைசி நாள் ஆகும்.


 






தொலைத்தொடர்பு விதிகளின்படி உரிமம் வைத்திருப்பவர் அல்லது பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்திற்கு, நுழைவுக் கட்டணம், உரிமக் கட்டணம், பதிவுக் கட்டணம் அல்லது வேறு ஏதேனும் கட்டணங்கள், அல்லது அபராதம் உள்பட எந்தக் கட்டணத்தையும் மத்திய அரசு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தள்ளுபடி செய்யலாம்.


மத்திய, மாநில அரசிடம் அங்கீகாரம் பெற்ற செய்தியாளர்களின் பத்திரிகை செய்திகளை இந்தியாவில் இடைமறிப்பதில் இருந்து விலக்கு அளிக்க மசோதா முன்மொழிந்துள்ளது. 


 






இருப்பினும், எந்தவொரு பொது அவசரநிலையின் போதும் அல்லது இந்தியாவின் பொது பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு அல்லது பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கு அல்லது குற்றத்தைத் தூண்டுவதைத் தடுப்பதற்காக விலக்கு அளிக்கப்படாது என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.