சர்வதேச யோகா தினம், நாளை மறுநாள் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்தியாவில், மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் நாடு முழுவதும் யோகா அமர்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


கோலாகலமாக நடைபெற உள்ள சர்வதேச யோகா தினம்:


மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசாவுக்கு செல்ல உள்ள நிலையில், ​​பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐஎன்எஸ் விக்ராந்தில் யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க உள்ளார்.


கடந்த ஜூன் 2ஆம் தேதி, பாலசோரில் நடந்த ரயில் விபத்தால் 290 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடைபெற்று இரண்டு வாரங்களே ஆகியுள்ள நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒடிசாவின் பாலசோருக்கு அஷ்வினி வைஷ்ணவ் செல்ல உள்ளார். 


துயரமான விபத்தின் சவாலான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதிலும் உதவுவதிலும் முக்கிய பங்காற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை மத்திய அமைச்சர் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். நிலைமையை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதோடு, யோகா நிகழ்ச்சியிலும் வைஷ்ணவ் கலந்து கொள்கிறார்.


மத்திய அரசின் பெரிய திட்டம் இதுதான்:


9ஆவது சர்வதேச யோகா தினத்தன்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக யோகா அமர்வுக்கு தலைமை தாங்குகிறார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் யோகா மேற்கொள்ள உள்ளார்.


டெல்லி எய்ம்ஸில் நடைபெற உள்ள யோகா தின கொண்டாட்டத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்குகிறார்.


மத்திய சுற்றுலா அமைச்சகம், கோவாவின் ராஜ்பவத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அங்கு ஜி20 அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் யோகா அமர்வில் பங்கேற்கின்றனர். மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கேரிசன் மைதானத்தில் பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது, 80 நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.


சர்வதேச யோகா தினம், யோகாவின் பல நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐநாவில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதற்கான வரைவுத் தீர்மானம் இந்தியாவால் முன்மொழியப்பட்டது. இதை, 175 உறுப்பு நாடுகள் அங்கீகரித்துள்ளன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 69ஆவது கூட்டத் தொடரில், பிரதமர் மோடி தனது உரையில் இந்த திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தினார்.