மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னை சென்ட்ரலில்  இருந்து புறப்பட வேண்டிய  7 ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் மழை நீர் தேங்கியுள்ளதன் காரணமாக, வியாசார்பாடி- பேசின்பிரிட்ஜ்  இடையேயான பாலம் எண் 14-ல் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.  தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய திருப்பதி எக்ஸ்பிரஸ் திருவள்ளூரில் இருந்து புறப்படும். கோவை செல்லக்கூடிய இன்டர்சிட்டி விரைவு ரயில் ,லால்பாக் விரைவு ரயிகள் ஆவடியில் இருந்து புறப்படும் . சென்ட்ரலில்  இருந்து புறப்பட வேண்டிய மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ் திருவள்ளூரில் இருந்து புறப்படும்.  கோவை செல்லக்கூடிய வந்தேபாரத் ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். 


சென்னையில் இன்று காலை முதல் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது.  சென்னையில் நேற்று காலை முதல் லேசான மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய  பலத்த மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், திருவல்லிக்கேணி,  கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.  இந்த மழை அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தொடரும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர் மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை  உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் நகரின் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வேளச்சேரி, நந்தனம், ஆயிரம் விளக்கு, ராஜா அண்ணாமலைபுரம் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


தொடர்ந்து மழையால் சில பகுதிகளில் சாலையில் மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் சில பகுதிகளில் மழை நீர் வடியாமல் சூழ்ந்துள்ளது. சென்னை வியாசார்பாடியில்,  தண்டவாளத்தில் மழை நீர் தேங்கி உள்ளதன் காரணமாக ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.