International Yoga Day: இன்று உலகம் முழுவதும் 11வது சர்வதேச யோகா தினம் உற்சாகாமாக கொண்டாடப்படுகிறது.
சர்வதேச யோகா தினம்:
யோகா என்பது இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்திலிருந்து உலகிற்கு வழங்கப்பட்ட ஒரு காலத்தால் அழியாத பரிசு ஆகும். இது உடலையும் மனதையும் வளர்த்து, உடல் வலிமை மற்றும் உள் அமைதிக்கான பாதையை வழங்குகிறது. கடந்த 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும், பொதுவெளியில் யோகா பயிற்சிகளை மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களும் அதில் ஈடுபட வலியுறுத்துவர்.
1300 இடங்கள், 2000 நிகழ்வுகள்:
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி இன்று 191 நாடுகளில் பல்வேறு யோகா நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகள் மத்திய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளின் பல நகரங்களை உள்ளடக்கிய 1,300 இடங்களில் 2,000க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளது. 'யோகா பந்தன்' என்ற தலைப்பிலான யோகா தினத்தில் பிரேசில், அர்ஜென்டினா, ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா, மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த 17 யோகா குருக்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இந்தியா முழுவதும் யோகா தின நிகழ்வுகளை வழிநடத்துகின்றனர். பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் சார்பிலும் இஸ்லாமாபாத்தில் யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்திலும் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி பெருமிதம்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஏராளமானோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அவரை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது பேசிய மோடி, “யோகா அனைவருக்குமானது. எல்லா நாடுகளுக்கு எல்லைகளை தாண்டியது. துரதிர்ஷ்டவசமாக, இன்று முழு உலகமும் சில பதற்றங்கள், அமைதியின்மை மற்றும் பல பகுதிகளில் உறுதியற்ற தன்மை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற காலங்களில், யோகா நமக்கு அமைதியின் திசையை அளிக்கிறது. யோகா என்பது மனிதகுலம் சுவாசிக்கவும், சமநிலைப்படுத்தவும், மீண்டும் முழுமையடையவும் தேவையான இடைநிறுத்த பொத்தான்” என தெரிவித்தார்.
திபெத் பள்ளத்தாக்குகளில் உள்ள ராணுவ வீரர்களும், உறை பனியிலும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.