இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்


நாடு முழுவதும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக  வானிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இது குறைந்த பட்சம் ஒரு வாரம் நீடிக்கிறது. மேலும் காய்ச்சல் மறைந்தாலும், இருமல், குமட்டல், வாந்தி போன்ற பிற அறிகுறிகள், தொண்டை புண் மற்றும் உடல் வலி முழுமையாக குணமடைய அதிக நேரம் எடுக்கிறது. NCDC இன் தகவலின்படி, இந்த வழக்குகளில் பெரும்பாலானவை H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவ அமைப்பின் கூற்றுப்படி, "தொற்றுநோய் பொதுவாக ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். காய்ச்சல் மூன்று நாட்கள் முடிவில் மறைந்துவிடும், ஆனால் இருமல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும்", என்று கூறப்பட்டுள்ளது.


நீண்ட நாட்களுக்கு காய்ச்சல் இருப்பதால் மக்கள் உடனே குணமடைய நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (Antibiotics) உட்கொள்கிறார்கள். இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) மருத்துவர்களுக்கு, ஆண்டிபயாடிக் மருந்துகளை வழங்குவதைத் தவிர்த்து, அறிகுறிக்கான சிகிச்சையை மட்டுமே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.


அறிகுறிகள்


இந்த இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் அறிகுறிகள் என்னவென்றால், சளி, இருமல், வாந்தி, மயக்கம், வறண்ட தொண்டை, உடல் வலி, வயிற்றுப் போக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.


முன்னெச்சரிக்கை


இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வராமல் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.  அதன்படி,



  • உங்கள் கைகைளை அடிக்கடி கை கழுவு வேண்டும்.

  • வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் குளிக்க வேண்டும்

  • முகக் கவசம் அணிதல், அதிகம் கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

  • தும்பல், இருமல் வரும்போது மூக்கு மற்றும் வாயை மூட வேண்டும்

  • வாய் மற்றும் மூக்கை தொடுவதை தவிர்க்க வேண்டும்

  • குளிர்ந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

  • காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் 


ஆன்டிபயாடிக்


இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) மருத்துவர்களுக்கு, ஆண்டிபயாடிக் மருந்துகளை வழங்குவதைத் தவிர்த்து, அறிகுறிக்கான சிகிச்சையை மட்டுமே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 


தவிர்க்கப்பட வேண்டிய ஆன்டி-பயாட்டிக்ஸ்



  • அசித்ரோமைசின்

  • அமோக்ஸிக்லாவ்

  • அமோக்ஸிசிலின்

  • நார்ஃப்ளோக்சசின்

  • சிப்ரோஃப்ளோக்சசின்

  • ஆஃப்லோக்சசின்

  • லெவ்ஃப்ளோக்சசின்

  • ஐவர்மெக்டின்


இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளை அதிகப்படியாக பயன்படுத்தினால், எதிர்ப்புக்கு வழிவகுக்கும் என்று இந்திய மருத்துவ சங்கம்  (ஐஎம்ஏ) எச்சரித்துள்ளது.


’உயிரிழப்பு அபாயம் இல்லை’


தற்போது பரவிக் கொண்டிருக்கும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்  காய்ச்சலால் உயிரிழப்புக்கு அபாயம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 92 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், 86 சதவீதம் பேருக்கு சளி, இருமலும், 27 சதவீதம் பேருக்கு மூச்சு திணறலும் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.


மேலும் 16 சதவீதம்  பேருக்கு நிமோனியா, 6 சதவீதம் பேருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. மேலும் 10 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படும் அளவுக்கு பாதிப்பு உள்ளது, 7 சதவீதம் பேருக்கு தீவிர சிகிச்சை பெரும் நிலைக்கு பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.