இந்தியாவில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு சர்வதேச மாம்பழ திருவிழா கொண்டாப்படுகிறது.


சர்வதேச மாம்பழ திருவிழா:


இந்தியாவில் கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாம்பழ திருவிழா கொண்டாட்டப்படுகிறது. உலகம் முழுவதும் மாம்பழ வர்த்தகத்தை பெருக்கவும் , மாம்பழங்களின் வகைகள் மற்றும் அதன் பயன்பாடுகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தவும்  அரசு சார்பில் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், தேசிய தோட்டக்கலை வாரியம் மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் ஆகியவற்றுடன் இணைந்து டெல்லி  சுற்றுலாத்துறை இந்த விழாவிற்கான‌ ஏற்பாடுகளை செய்து வருகிறது. இன்று ( ஜூலை 9 ) மற்றும் நாளை (ஜூலை 10) ஆகிய இரு தினங்களில் மாம்பழ திருவிழா நடைபெறவுள்ள சூழலில் டில்லி ஹாட், பீடம்புராவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.






விழாவின் சிறப்புகள் :


இந்த ஆண்டு நடைப்பெறவுள்ள விழாவில் இந்தியாவில் விளையும் அல்போன்சா, மல்லிகா, அம்ரபாலி, ஹிம்சாகர், மால்டா, பாலியா, சோரஸ்யா, தமன், தூன், ஃபாசியா, கெல்சியா, நிகரின் கெரியா, ருச்சிகா மற்றும் ஷமாசி உள்ளிட்ட பல வகையான மாம்பழங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.இந்தியாவில் சுமார் 1,500 வகை மாம்பழங்கள்  கிடைக்கின்றன‌. ஒவ்வொரு வகையும் தனித்தனியான சுவை, வடிவம் மற்றும் நிறத்துடன் வருகிறது. சுமார் 300 கிராம் எடையுள்ள ரத்னகிரி அல்போன்சோ மற்றும் பீகாரிலிருந்து வரும் மால்டா மாம்பழம் நிகழ்ச்சியின் ராஜா என அழைக்கப்படுகிறது.






போட்டிகள் :


இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்ப்பட்ட மாம்பழங்களை பார்வையாளர்கள் ருசிக்க முடியும். மேலும் மாம்பழம் சாப்பிடும் போட்டிகளும் நடைபெறவுள்ளது. அதோடு மாம்பழ உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளால் மாம்பழத்தால் செய்யப்பட்ட பழச்சாறு , ஊறுகாய் உள்ளிட்ட திண்பண்டங்களும் விற்பனை செய்யப்படவுள்ளது. இது அந்த பகுதி மக்களிடம் அதிகம் வரவேற்பை பெறும் திருவிழாக்களுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.