இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதேபோல் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பரவலின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநில அரசுகள் இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் இத்தாலியில் இருந்து அமிர்தசரஸிற்கு வந்த விமானத்தில் 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலியில் இன்று அமிர்தசரஸ் வந்த விமானத்தில் சுமார் 179 பயணிகள் பயணித்துள்ளனர். அவர்களுக்கு அமிர்தசர்ஸ் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு டெல்டா வகை தொற்றா அல்லது ஒமிக்ரான் வகை தொற்றா என்பது தொடர்பாக இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
முன்னதாக இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மத்திய அரசு 9 மாநிலங்களுக்கு தீவிர எச்சரிக்கை விடுத்தது. அத்துடன் அந்த மாநிலங்களில் சுகாதாரத்துறை கொரோனா பரிசோதனை அளவை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 90 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது சராசரி பதிப்பைவிட 65 சதவிகிதம் அதிகமானது என்று கூறப்படுகிறது. அத்துடன் ஒமிக்ரான் தொற்று பாதிப்பும் இந்தியாவில் அதிகரித்து வருவதால் கொரோனா பரவல் மீண்டும் தீவிரம் எடுக்க தொடங்கியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: பிரதமர் பயண விதிமுறைகள் என்ன? பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்வது யார்? SPG செய்வது என்ன?