நாகாலாந்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ராணுவப் பிரிவின் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யும் நோக்கத்துடன் அப்பிரிவினர் சென்றதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


நாகலாந்து உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் (AFSPA)நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் முன் அனுமதியின்றி பாதுகாப்பு படையினர் சோதனையிடவும், வாரன்ட் ஏதுமின்றி எவரையும் கைது செய்யவும் முடியும்.


மியான்மர் எல்லைப் பகுதியில் நாகலாந்து மாநிலத்தின் மோன் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இதன் எல்லை வழியாக மியான்மரை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி, தாக்க முயலும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர்.


கடந்த சனிக்கிழமை இரவு (டிசம்பர் 4), நாகாலாந்தில் மியான்மர் எல்லையருகே உள்ள மோன் மாவட்டத்தையொட்டிய கிராமத்தில் நாகா தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் கடும் சோதனையில் மேற்கொண்டனர். இந்நேரத்தில் பணியில் இருந்த வீரர்களுக்கும் ஒரு கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் சுட்டனர். இதில் பொதுமக்கள் 6 பலியாகினர். இவர்கள் அனைவரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்த கூலித் தொழிலாளர்கள் ஆவார். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஊருக்கு வந்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தவர்கள். தங்களது கிராமங்களுக்கு செல்ல காத்திருந்த போதுதான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.






இது தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு மாநில அரசும், ராணுவமும் உத்தரவிட்டுள்ளன. இது தொடர்பாக ராணுவத்தின் 21வது துணை சிறப்பு பிரிவினர் மீது நாகாலாந்து போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது, "பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சென்றதாக ராணுவ பிரிவு சார்பில் கூறப்பட்டுள்ளது. போலீஸ் மற்றும் எல்லை பாதுகாப்பு பணியில் உள்ள அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்காமல், ராணுவத்தின் சிறப்பு படை சென்றுள்ளது. இதில் இருந்தே கொலை செய்ய வேண்டும், காயமேற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் சென்றுள்ளது உறுதியாகிறது. எதிர்தரப்புக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளனர்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதற்கிடையே பரபரப்பை தணிக்கும் நடவடிக்கையாக கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு நேற்று காலை முதல் மாலை வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதே நேரத்தில் நாகா மக்கள் சங்கமும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனிடையே ஒடிங்க் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசத்தில் ஏ.எப்.எஸ்.பி.ஏ., எனப்படும் ராணுவ படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்குவதற்காக ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதால், அந்த அதிகாரத்தை ரத்து செய்யும்படி மனித உரிமை அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன.



பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய மக்கள் கட்சித் தலைவரான மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, இந்த சட்டத்தை திரும்பப் பெறும்படி வலியுறுத்தியுள்ளார். இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று நாகலாந்து முதலமைச்சர் நெய்பி ரியோவும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "பதற்றம் நிறைந்த பகுதி என்று கூறி, ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய அரசு நாகலாந்தில் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால் இங்குள்ள அனைத்து ஆயுதக்குழுக்களும் சண்டை நிறுத்தத்தை அறிவித்து, அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்று வருகின்றன. அப்படி இருக்கையில் எதற்காக இந்த சட்டத்தை இன்னும் நடைமுறைப்படுத்த வேண்டும்?


பாதுகாப்பு படையினருக்கு, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வரம்பற்ற அதிகாரத்தை அளிக்கிறது. இதனை நீக்க வேண்டும் என்று பெரும்பான்மையோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா ஜனநாயக நாடு என்பதை மறந்துவிடக் கூடாது" என்று கூறியுள்ளார். இவர்கள் மட்டுமின்றி நாகாலாந்து மாநில பாஜக நாகாலாந்து சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், அரசு உண்மையான விளக்கம் அளிக்க வேண்டும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது எனவும், மத்திய அரசு உண்மையான விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும், ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் தங்களது சொந்த நிலத்தில் பாதுகாப்பாக இல்லாத நிலையில், உள்துறை அமைச்சகம் என்ன செய்துகொண்டிருக்கிறது," என பதிவிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதின் ஓவைசி ஆகியோரும் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.


Read More: நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா






சம்பவம் குறித்து கேள்விகள் பலமாக எழத்தொடங்கியதில் இருந்தே அமித் ஷா விளக்கம் அளிப்பார் என்று கூறி வந்த நிலையில் அது தொடர்பாக லோக்சபாவில் அறிக்கை தாக்கல் செய்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேசியதாவது, "நாகாலாந்தில் நடந்த சம்பவத்துக்கு மத்திய அரசு தன் வருத்தத்தையும், அதிருப்தியையும் தெரிவிக்கிறது. இந்தப் பிரச்னை தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து, ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யும். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளின்போது மிகவும் கவனமுடன் செயல்படும்படி அனைத்து அமைப்புகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்கும்படி உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்ததும், ராணுவத்தின் 21வது துணை சிறப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தும்படி கூறியுள்ளனர். ஆனால் வாகனத்தை நிறுத்தாததால் பயங்கரவாதிகள் இருப்பதாக நினைத்து ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த வாகனத்தில் இருந்த எட்டு பேரில், ஆறு பேர் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் உள்ளூர் மக்கள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்காப்புக்காக ராணுவத்தினர் சுட்டதில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும், ஒரு ராணுவ வீரர் இறந்து உள்ளார். இதைத் தொடர்ந்து ராணுவ முகாம் மீது மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதை தடுக்க ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்." இவ்வாறு அவர் கூறினார். 



இந்த அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து காங்., - தி.மு.க., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக நாகாலாந்து சம்பவத்தில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மேலும் ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை திரும்பப் பெறவும் வலியுறுத்தினர். பின்னர் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி கூறியதாவது, "இந்த அறிக்கையில் தெளிவு இல்லை. இது நாகாலாந்தில் இருந்து வெளிவரும் குழப்பமான செய்திகளுடன் தொடர்புபடுத்த முடியாது. ஏன் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, ஏன் ஒரு ராணுவ வீரர் உயிரை இழக்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். ஆனால் அரசிடம் உரிய பதில் இல்லை." இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் ராணுவ வீரர்களை விசாரிக்க விசாரிக்க 5 உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏடிஜிபி சந்தீப் தாம்கட்கே மேற்பார்வையில், இக்குழு விசாரணை மேற்கொள்ளும் என மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இக்குழுவில், எல்.ஜமீர் ஐபிஎஸ், எம்.ரூபா ஐபிஎஸ், மனோஜ் குமார் ஐபிஎஸ், நாகாலாந்து காவல் பிரிவைச் சேர்ந்த கில்லாங் வாலிங், ரேலோ அய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஒரு மாதத்திற்குள் இக்குழு விசாரணையை முடிக்கும் எனவும், நாகாலாந்து தலைமைச் செயலாளர் ஜே. ஆலம் தெரிவித்துள்ளார்.