நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து மத்திய அரசு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 


மியான்மர் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள நாகாலாந்து மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாடுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்திய பாதுகாப்புப் படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில், Tiru-Oting என்ற சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த பழங்குடியினத் தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இதில், தொழிலாளர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 


இதற்கிடையே தவறுதலான துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள் மிகுந்த வருத்தம் அளிப்பதாக இந்தியா ராணுவம் தெரிவித்தது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " கிளர்ச்சியாளர்களின் நடமாட்டம் குறித்துக் கிடைந்த உளவுத்துறையின் நம்பகமான தகவலின் அடிப்படையில், நாகாலாந்து, மோன் மாவட்டத்தில் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதன் பின் நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கக் கூடியது" என்று தெரிவித்தது.  
  
எனினும் இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியினர் இன்று காலை முதலே அமளியில் ஈடுபட்டுவந்தனர். ஏன் இப்படி நேர்ந்தது, துப்பாக்கிச் சூட்டிற்கு யார் உத்தரவிட்டது, உளவுத்துறை தகவலின் அடிப்படையில் நடந்தது என்றால் ஏன் உளவுத்துறை தவறான தகவலைத் தந்தது என்ற பல்வேறு கேள்விகளை அவர்கள் எழுப்பினர். 


இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய திமுக மக்களவைக் குழுத் தலைவரான டி.ஆர்.பாலு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், முழு விசாரணை நடத்தி யார் இந்த சம்பவத்திற்குக் காரணம் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் நாகாலாந்தில் பொதுமக்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டது குறித்து இன்று மாலை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளிப்பார் என்று கூறப்பட்டது. 




அதன்படி இன்று மாலை மக்களவையில் பேசிய அமைச்சர் அமித்ஷா, ''நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ராணுவம் மன்னிப்பு கோரியுள்ளது. அப்பாவி மக்கள் உயிரிழப்பிற்கு மத்திய அரசு வருத்தம் தெரிவிக்கிறது. நாகாலாந்தில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும், அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் நேராமல் கவனத்துடன் செயல்படவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 


மாநில அரசு, மத்திய அரசின் பிரதிநிதிகள் மற்றும் ராணுவப் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாகாலாந்து கள நிலவரத்தை உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது. அங்கு சகஜ நிலையைக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 


சம்பவத்திற்கு என்ன காரணம் என்று முழு விசாரணை நடத்தப்படும். விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.