இந்திய கடற்படையின் மிகப் பழமையான கப்பலான ஐஎன்எஸ் மகர், 36 ஆண்டுகள் தேசத்திற்கு சேவை செய்த பின்னர் சனிக்கிழமை பணியிலிருந்து ஓய்வு பெற்றது.  






கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் இதற்கான விழா நடைபெற்றது. இந்த கப்பலுக்கு சிடிஆர் ஹேமந்த் வி சலுங்கே தலைமை தாங்கினார். வைஸ் அட்மிரல் எம்.ஏ. ஹம்பிஹோலி, (பி.வி.எஸ்.எம்., ஏ.வி.எஸ்.எம்., என்.எம்., ஃபிளாக் ஆபீசர் கமாண்டிங்-இன்-சீஃப்), 2005- 2006 வரை கப்பலின் தலைமைப் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இந்த விழாவில் கப்பலின் காலவரிசை மற்றும் சிறப்பு அஞ்சல் அட்டையும் வெளியிடப்பட்டது, இதில் ஆயுதப்படைகள், படைவீரர்கள் மற்றும் சிவில் நிர்வாகத்தின் மூத்த பணியாளர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.







1984ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி அன்று மீரா தஹிலியானியால் ஐஎன்எஸ் மகர் நாட்டிற்காக சேவை செய்ய அர்பணிக்கப்பட்டது. 1987ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி அன்று கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப்யார்ட் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட்டில் மறைந்த அட்மிரல் ஆர்.எச் தஹிலியானியால் இயக்கப்பட்டது என்று கடற்படை தெரிவித்துள்ளது. சேவையின் போது, ​​ பல மீட்பு பணிகள் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபட்டது. அவற்றில் குறிப்பிடத்தக்கது Op Samudra Setu ஆகும், இதில் 4,000 க்கும் மேற்பட்ட இந்திய பிரஜைகள் கொரோனா காலக்கட்டத்தில் உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் 2004ல் சுனாமிக்குப் பிறகு 1,300 க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றியதில் ஐஎன்எஸ் மகர் கப்பல் முக்கிய பங்கு வகித்தது. இந்திய ராணுவத்துடன் பல கூட்டு ராணுவ பயிற்சிகளின் ஒரு பகுதியாக செயல்பட்டது.


2018ம் ஆண்டில், இதனை பயிற்சிக் கப்பலாக மாற்றப்பட்டு கொச்சியில் உள்ள முதல் பயிற்சிப் படையில் சேர்ந்தது. மேலும் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி இந்திய மருத்துவ சங்கத்துடன் இணைந்து ரத்த தான முகாம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் இந்த கப்பல் முக்கிய பங்கு வகித்தது. 36 ஆண்டுகள் பல்வேறு நடவடிக்கைகளில் இந்திய ராணுவத்தில் சேவை செய்த பின் தற்போது நிரந்தரமாக ஓய்வு பெற்றுள்ளது ஐஎன்எஸ் மகர்.