நாட்டில் சமூக அளவில் மிக பெரிய தாக்கங்களை ஏற்படுத்திய தலைவர்கள் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் ஜோதிராவ் புலே. இவர்களை அவமதிக்கும் விதமாக மகாராஷ்டிர அமைச்சரும் பாஜக மாநில தலைவருமான சந்திரகாந்த் பாட்டீல் பேசியதாகக் கூறப்படுகிறது. 


இதையடுத்து, பிம்ப்ரி நகரத்திற்கு சென்ற அவர் மீது கறுப்பு மை வீசப்பட்டுள்ளது. மை வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக பிம்ப்ரி-சின்ச்வாட் போலீஸ் கமிஷனர் அங்குஷ் ஷிண்டே தெரிவித்தார்.


கட்டிடத்திற்கு சென்றுவிட்டு வெளியே வரும் பாட்டீல் மீது கறுப்பு மை வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சம்பவம் நடந்த உடனேயே அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்தனர். மை வீச்சு சம்பவத்திற்கு முன்பே, சில போராட்டக்காரர்கள் அமைச்சரின் கான்வாய் மீது கருப்புக் கொடி காட்ட முயன்றனர்.


அவுரங்காபாத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மராத்தியில் பேசிய மகாராஷ்டிர உயர் மற்றும் தொழில்நுட்பத்துறை கல்வி அமைச்சரான பாட்டீல், "அம்பேத்கரும், பூலேவும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு மானியத்தை நாடவில்லை என்றும், பள்ளி, கல்லூரிகளை தொடங்குவதற்கு நிதியை மக்களிடம் பிச்சையாக கேட்டதாக" கூறினார்.


 






இதில், அம்பேத்கரும், பூலேவும் பிச்சை எடுத்ததாக அமைச்சர் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது. சந்திரகாந்த் பாட்டீல் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ள மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், "பாட்டீலின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "பிம்ப்ரியில் நடந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. பாட்டீல் தவறான வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தாலும், அவர் எதை அர்த்தப்படுத்தினார் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.


டாக்டர் அம்பேத்கர் மற்றும் கல்வியாளர் பௌராவ் பாட்டீல் போன்றவர்கள் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் இருந்து பணம் வாங்கவில்லை என்பதையே அவர் தெரிவிக்க முயன்றார்" என்றார்.


தான் பேசியதற்கு தெளிவுப்படுத்திய பாட்டீல், "டாக்டர் அம்பேத்கர், மகாத்மா பூலே ஆகியோரை நான் எப்போது விமர்சித்தேன்? அவர்கள் அரசின் உதவிக்காக காத்திருக்கவில்லை, பள்ளிகளைத் தொடங்க பிச்சை எடுத்தார்கள் என சொன்னேன்.


நீதிமன்றத்தில் யாரேனும் 'நீதிக்காக மன்றாடுகிறேன்' என்று சொன்னால், 'பிச்சை' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தவறா? மை வீசுவதால் ஒன்றும் ஆகாது. எனவே, சட்டையை மாற்றிக்கொண்டு நகர்ந்தேன்" என்றார்.