Infosys Gst Evasion: இன்ஃபோசிஸ் நிறுவனம் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமாகும்.


இன்ஃபோசிஸ் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு?


நாட்டின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ்,  32,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி,  ஜூலை 2017 முதல் 2021-22 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இன்ஃபோசிஸ் நிறுவனம் சேவைகளைப் பெறுபவராக, சேவைகளின் இறக்குமதிக்கு ஐஜிஎஸ்டி செலுத்தாததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.32,403 கோடி என்பது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஓராண்டு லாபத்தை விட அதிகமாகும்.


குற்றச்சாட்டுகள் என்ன?


DGGI இன் படி, ஒப்பந்தத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக நிறுவனம் வெளிநாட்டு கிளைகளைத் திறக்கிறது. இந்தக் கிளைகள் மற்றும் நிறுவனங்கள் IGST சட்டத்தின் கீழ் தனித்துவமான நபர்களாகக் கருதப்படுகின்றன.  அத்தகைய சூழலில், நிறுவனம் வெளிநாட்டு கிளை அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட பொருட்களுக்கான பணமாக அல்லாமல், வெளிநாட்டு கிளை செலவுகளாக பணத்தை கிளை அலுவலகங்களுக்கு செலுத்தியுள்ளது என்று ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, இன்ஃபோசிஸ் லிமிடெட், ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசத்தின் கீழ் இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள கிளைகளிலிருந்து பொருட்களைப் பெறுவதற்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரியில் உள்ள ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம் (ஆர்சிஎம்) என்பது சப்ளையர்களுக்குப் பதிலாக, சரக்கு மற்றும் சேவைகளைப் பெறுபவர் வரி செலுத்த வேண்டிய ஒரு அமைப்பாகும்.  இன்ஃபோசிஸ் நிறுவனம் ஜிஎஸ்டி இயக்குனரகத்திடமிருந்து விசாரணைக்கு நோட்டீஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து இன்ஃபோசிஸ் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 


பங்குச்சந்தையில் தாக்கம்?


ஜூன் காலாண்டில், இன்ஃபோசிஸின் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை காட்டிலும்,  7.1 சதவிகிதம் உயர்ந்து ரூ. 6,368 கோடியாக உள்ளது. செயல்பாடுகளின் வருவாய் ரூ.39,315 கோடியாக உயர்ந்திருப்பது,  கடந்த ஆண்டை விட 3.6 சதவீதம் அதிகமாகும். இன்ஃபோசிஸ் நிறுவனம் தான் சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் (ஜிஎஸ்டிஎன்) போர்ட்டலை இயக்குவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015 ஆம் ஆண்டில், இன்ஃபோசிஸ் சரக்கு மற்றும் சேவை வரிக்கான (ஜிஎஸ்டி) தொழில்நுட்ப தளத்தை உருவாக்க ரூ.1,380 கோடி ஒப்பந்தத்தைப் பெற்றது. இந்நிலையில், அந்நிறுவனமே வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஜிஎஸ்டி இயக்குனரகத்தின் நோட்டீஸை தொடர்ந்து,  இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் இன்று சரிவை சந்திக்கலாம் என கருதப்படுகிறது. இது பங்குதாரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.