kerala Landslide: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, காணாமல் போன 200 பேர் பற்றி இதுவரை தகவல் ஏதும் இல்லை என கூறப்படுகிறது.


270 பேர் உயிரிழப்பு:


கடந்த 2 தினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, காணமாமல் போனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூவாயிரத்திற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 200-க்கும் மேற்பட்டவர்கள் பற்றி தற்போது வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. தற்போது வரை 270 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் தமிழர்களும் அடங்குவர் எனவும், 30-க்கும் மேற்பட்ட தமிழர்களை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் சமீரன் எனும் ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.


வயநாடு வருகிறார் ராகுல் காந்தி:


வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பாதிப்புகளை, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று பார்வையிடுகிறார். அதோடும், அந்த நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்.பி., ஆன ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை இன்று பார்வையிடுகின்றனர். இதனிடையே, வயநாடு பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.