கொரோனா பெருந்தொற்று காலத்தில், கடந்தாண்டில் 84 சதவீத இந்திய குடும்பங்களின் சராசரி மாத வருமானம் குறைந்துள்ளதாக OXfam அறிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், அதே கால கட்டத்தில் நாட்டின் ஒட்டு மொத்த செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

  


உலகப் பொருளாதார அமைப்பின் டாவோஸ் நிகழ்வில் 'உலக நிலை' குறித்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, OXfam அமைப்பு 'Inequality Kills' என்ற தலைப்பில் 2022 இந்தியாவின் அதிதீவிர பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்  என்ற துணைநிலை அறிக்கையை வெளியிட்டது. 


அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய கருத்துக்கள் பின்வருமாறு: 


1. 2015ம் ஆண்டில் இருந்து, இந்தியாவின் ஒட்டுமொத்த வளங்கள் யாவையும், 1 சதவிகிதம் எண்ணிக்கை கொண்ட செல்வந்தர்களை நோக்கி செல்கிறது 


2. நாட்டின் 45% பொருளாதார வளங்களை, மேல்தட்டு தளத்தில் உள்ள 10% பேர் கைப்பற்றியுள்ளனர். அதாவது, இந்தியாவில் வாழும் 50 கோடி மக்களுக்கு இணையான செல்வ வளத்தை முதல் 98 செல்வந்தர்கள் கொண்டுள்ளனர். 


3. முதல் 100 செல்வந்தர்களின் நிகர மதிப்பு மட்டும் 775 பில்லியன் அமெரிக்க டாலராகும் (இந்திய ரூபாயில் - 5,75,35,61,25,00,000). கடந்தாண்டில் மட்டும், 80% இந்திய செல்வந்தர்களின் வளங்கள் அதிகரித்துள்ளது. அதேசமயம், 84 சதவீத இந்திய குடும்பங்களின் சராசரி மாத வருமானம் குறைந்துள்ளது.  




 


4. அதானி குழுமத்தின் தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சி கடந்தாண்டில் மட்டும் 8 மடங்காக அதிகரித்துள்ளது. 2020ல் அதானியின் வருமான வளர்ச்சி 8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், 2021 ல் அது 50 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகருத்துள்ளது. அதானியின், ஒட்டுமொத்த வளங்களின் மதிப்பு மட்டும் 82.2 அமெரிக்கா டாலர் ஆகும். அதே போன்று, 2021ல் அம்பானியின் மதிப்பு இரட்டிப்பாகி உள்ளது. 


5. உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நான்கில் ஒரு பங்கினர் இந்தியாவில் தான் வசிக்கின்றனர். அதீத பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, இவர்கள் அடிப்படை வாழ்வாதாரங்கள் பெறுவதற்கான உரிமை, தரமான வாழ்க்கையை பெறாமல் உள்ளனர். 


ஏற்றத்தாழ்வுக்கான அடிப்படைக் காரணங்கள்:


1. 2019ல், பெருநிறுவனங்களுக்கான வருவான வரி விகிததடை மத்திய அரசு  அதிகளவு குறைத்தது. இதன் காரணமாக, மத்திய அரசுக்கு வரும் வருவாயில் 1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.    


2. 2016-ல் பணக்காரர்களின் செல்வத்தின் மதிப்பின்மீது விதிக்கப்படும் செல்வ வரி (Wealth Tax) ரத்து செய்யப்பட்டது. 


 





மேலமட்டத்தில் உள்ள முதல் 98 பணக்காரர்களின் செல்வத்தின் மதிப்பின்மீது வெறும் 4% செல்வ வரி விதிக்கும் நிதியைக் கொண்டு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் 2 வருட ஒட்டுமொத்த செலவீனங்களை சமாளிக்கலாம். நாடு முழவதும் மதிய உணவு திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்தலாம். அனைவருக்கும் கல்வியை வழங்கும் (Sarva Shiksha Abhiyan) திட்டத்தை 6 ஆண்டுகள் செயல்படுத்தலாம். குறைந்தது 1% செல்வ வரி விதித்தால் கூட, சுகாதார அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு 7 ஆண்டுகளுக்கு மேல் நிதிஉதவி செய்யமுடியும் என Oxfam அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


3. நேரடி வரியை விட, ஜிஎஸ்டி போன்ற மறைமுக வரியில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்துகிறது, ஜிஎஸ்டி வரி செல்வந்தர்களையும், ஏழைகளையும் ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்க்கிறது. இந்த போக்கு,  நாட்டின் பொருளாதார  ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்துகிறது.   


4. கொரோனா பெருந்தொற்று காலங்களில் கூட மத்திய அரசு சுகாதார கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை. உதாரணமாக, முதல் 100 பணக்காரர்களின் செல்வத்தில் 1% வரியில், ஒட்டுமொத்த தடுப்பூசி திட்டங்களுக்கு நிதியுதவி அளித்திருக்கலாம்.


5. இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ்  "சுகாதாரம்" என்பது மாநிலங்களின் கட்டுப்பாட்டில் வருகின்றன கொரோனா போன்ற பேரிடர் காலத்திலும், மத்திய அரசு மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளாத (Undivisble pool ), மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை (Surcharge and Cess) அதிகரித்துள்ளது. இது, நோய் வாய்ப்பட்ட மக்கள் தரமான வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பைத் தடுக்கிறது. உதாரணமாக, சிறப்பு உயர்தர மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான செலவுகள்,  மிகத் தீவிர வறுமையில் வாடும் மக்களின் மாதவருவாயை விட 13 மடங்கு அதிகமாக காணப்படுகிறது.       


முடிவாக, ஏழ்மை, கல்லாமை, பசி மற்றும் பாகுபாடுடன் கூடிய வளர்ச்சி பாதியில் இந்தியா செல்கிறது என்று தெரிவித்துள்ளது.