பஞ்சாப் மாநிலத்தில் ஸ்ரீகுருரவிதாஸ் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிக்கு பதிலாக பஞ்சாப் தேர்தல் வரும் பிப்ரவரி 20-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டில் பஞ்சாப், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், கோவா உள்பட 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், உத்தரபிரதேச மாநில சட்டசபை அளவிற்கு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தல். பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆண்டுதோறும் குரு ரவிதாஸ் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக, ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பொதுமக்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசிக்கு யாத்திரை செல்வது வழக்கம். அந்த சமயத்தில் பஞ்சாபில் இருந்து சுமார் 20 லட்சம் மக்கள் யாத்திரையாக காசி செல்வார்கள்.
இந்தாண்டும் ஸ்ரீ குருரவிதாஸ் ஜெயந்தி 16-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சட்டசபை தேர்தல் பிப்ரவரி 14-ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் குரு ரவிதாஸ் ஜெயந்தியை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பலரும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலித் சமுதாய மக்கள் கோலாகலமாக கொண்டாடும் குரு ரவிதாஸ் ஜெயந்திக்காக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இன்று தேர்தல் ஆணையத்துடன் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி உள்பட பஞ்சாப் மாநில அரசியல் கட்சிகள் ஆலோசனை நடத்தின.
இந்த ஆலோசனையின்போது தேர்தலை ஒத்திவைப்பது குறித்தும், பொதுமக்களின் விருப்பம் குறித்தும், நடைமுறை சாத்தியங்கள், சிக்கல்கள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றே கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, பஞ்சாப் தேர்தலை ஒத்திவைத்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஞ்சாபில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சட்டசபைத் தேர்தல் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தூணாக வலம் வந்த முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். அவர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார்.
நவ்ஜோத்சிங் சித்து தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க., அம்ரீந்தர்சிங் கூட்டணி கட்சிக்கும் இடையே வலுவான போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு சம அளவிலான போட்டியில் ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் உள்ளது. இதனால், இந்த முக்கோண பலப்பரீட்சையில் வெற்றி பெறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் வலுவாகவே எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்