இந்தியாவில் மிகவும் முக்கியமான புலனாய்வு அமைப்புகளில் ஒன்று சிபிஐ. இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் உள்ள சில முக்கியமான வழக்குகளை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். குற்றவியல் குற்றம், பொருளாதார குற்றம், பண மோசடி குற்றம் உள்ளிட்ட பல தரப்பு குற்றங்களை சிபிஐ விசாரித்து வருகிறது. இதனால் அந்த அமைப்பில் பல தரப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட தேவை எழுந்து வருகிறது. 


இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி மத்திய அரசு சிபிஐ நிறுவனத்திற்கு 6 புதிய எஸ்பிகளை நியமித்தது. அதில் 4 பேர் ஐபிஎஸ் அதிகாரிகள் இல்லாமல் இருந்தனர். அவர்கள் இரண்டு பேர் இந்திய வருவாய் பணியிலும், ஒருவர் இந்திய தொலைத்தொடர்பு பணியிலும் மற்றொருவர் ஐடிஏஎஸ் அதிகாரியாகவும் இருந்தனர். இது சிபிஐயில் லேட்ரல் எண்ட்ரியின் தொடக்கமாக அமையலாம் என்று சில மூத்த அதிகாரிகள் கருத்து தெரிவித்து வருவதாக தெரிகிறது. ஏனென்றால் மத்திய அரசு சில துறைகளில் லேட்ரல் எண்ட்ரி வழியாக பணியாளர்களை நியமிக்கும் முறையை அறிமுகம் செய்திருந்தது. 


 


அது தற்போது சிபிஐயிலும் தொடங்கியுள்ளதாக தற்போது சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிபிஐயில் 2014ஆம் ஆண்டு முதல் ஒரு சில நேரங்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் இல்லாமல் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தற்போது ஒரே நேரத்தில் 4 பேர் காவல் பணியில் இல்லாதவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது முன்னாள் சிபிஐ அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடையே சில கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது. 


 


அதன்படி ஒரு சிலர் சிபிஐ இந்திய குற்றவியல் சட்டம் தொடர்பான குற்றங்களை விசாரித்து வருகிறது. இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி ஒரு காவல்துறை அதிகாரி மட்டும் விசாரணை நடத்த, கைது செய்ய மற்றும் உரிமம் இல்லாமல் ஆயுதங்கள் வைத்திருக்க முடியும். ஆகவே சிபிஐ ஒரு காவல் நிலையம் போன்று தான் செயல்பட்டு வருகிறது. எனவே இங்கு காவல்துறை சாராத அதிகாரிகளை நியமிக்கும் போது சில சிக்கல்கள் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளனர். 


மற்றொரு தரப்பினர் இதுகுறித்து கூறும் போது, “சிபிஐ தற்போது பல தரப்பட்ட பொருளாதார குற்றங்களை விசாரித்து வருகிறது. அவற்றை விசாரிக்கும் போது நமக்கு அதிக நிபுணத்துவம் தேவைப்படுகிறது. ஆகவே அந்த துறை சார்ந்த அதிகாரிகள் சிபிஐக்கு வரும் போது கூடுதல் பலமாக அமையும்” என்று தெரிவித்து வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண