இந்தியாவில் செயல்பட்டு வரும் உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்று சோமேட்டோ. இந்த நிறுவனம் அன்மையில் தன்னுடைய 10 நிமிட டெலிவரி திட்டம் தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் டிசிஎஸ் நிறுவனத்தில் ஐடி ஊழியராக பணியாற்றிய இளைஞர் ஒருவர் பகுதி நேரமாக சோமேட்டோ டெலிவரி பாயாக வேலை பார்த்து அவர்களின் கஷ்டம் தொடர்பாக பதிவிட்டுள்ளார். 


இது தொடர்பாக ஸ்ரீனிவாசன் ஜெயராமன் என்ற இளைஞர் தன்னுடைய Linked In பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “சோமேட்டோ ஊழியராக நான் சில நாட்கள் பணியாற்றி வருகிறேன். அப்போது சோமேட்டோ ஊழியர்களின் கஷ்டம் எனக்கு நன்றாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக உணவு டெலிவரி செய்யும் போது அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் பல உள்ளன. 


ஏனென்றால் பல வாடிக்கையாளர்கள் தங்களின் முகவரியை சரியாக கொடுப்பதில்லை. அத்துடன் பல ஓட்டல்களை நாம் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக அமைந்துள்ளது. கூகுள் மேப்ஸ் உதவியுடனும் கண்டறிவதில் பல தடைகள் உள்ளன. இவை தவிர ஒரு சில நேரங்களில் உணவு வாங்கும் இடத்திலிருந்து டெலிவரி செய்யும் தூரம் மிகவும் அதிகமாக உள்ளது. 


உதாரணமாக எனக்கு வந்த ஆர்டர் ஒன்றில் உணவு வாங்கிய இடத்திலிருந்து டெலிவரி செய்யும் இடம் சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் இருந்தது. ஹாட்ஸ்பாட் இடங்கள் என்று கருதப்படும் முக்கியமான இடங்களில் மிகவும் குறைவான ஆர்டர்கள் மட்டுமே வருகின்றன. அனைவரும் நினைப்பதை போல் அந்த இடங்களில் அதிக ஆர்டர்கள் வருவது கடினமானது. இந்த அனைத்தையும்விட தற்போது அதிகரித்து வரும் பெட்ரோல் விலையும் அவர்களுக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக சோமேட்டோ நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு உதவ வேண்டும். அவர்கள் உதவ உள்ளதாக நான் கேட்டேன். அது நடந்தால் அவர்களுக்கு நல்லதாக அமையும்” எனக் கூறியுள்ளார்.


அவரின் இந்தப் பதிவை பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர். டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து இவர் கடந்த மாதம் தன்னுடைய வேலையை விட்டுள்ளார். அடுத்து அவர் புதிய நிறுவனத்தில் வேலைக்கு சேர உள்ளார். அதற்கு முன்பாக வீட்டில் இருக்கும் இந்த இடைபட்ட நாட்களில் இவர் பகுதிநேரமாக சோமேட்டோவில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண