மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்: இதுகுறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (ஏடிசிபி) அலோக் குமார் சர்மா கூறுகையில், "விமான நிலையத்தில் சிலர் வெடிகுண்டு வைக்கப் போவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் வந்தது.
விமான நிலைய அதிகாரிகள் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ததுடன், சோதனை மேற்கொள்ளப்பட்டது. உள்ளூர் போலீசார் மற்றும் சிஐஎஸ்எஃப் படையினரும் இந்த சோதனை ஈடுபட்டனர். காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, வந்த வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என்பது தெரியவந்தது.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 507 கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
மத்திய பிரதேசத்தில் பதற்றம்: இதற்கு முன்பு, கடந்த ஜூன் 19ஆம் தேதி, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அமைந்துள்ள தேவி அஹில்யா பாய் ஹோல்கர் சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதை தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விமான நிலைய அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பின்னர், அவர்கள் மாவட்டத்தில் உள்ள ஏரோடிரம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி, மண்டலம் 1) வினோத் குமார் மீனா கூறுகையில், "தேவி அஹில்யா பாய் ஹோல்கர் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்துவிடுவோம் எனக் கூறி, விமான நிலைய அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
நாட்டின் பிற நகரங்களிலும் வெடிகுண்டு வைப்போம் என மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, மாவட்டத்தில் உள்ள ஏரோடிரம் காவல் நிலையத்தில் விமான நிலைய ஆணையம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இந்த விவகாரம் குறித்து அதிகாரியிடம் போலீஸார் தகவல் கேட்டுள்ளனர். கடந்த காலங்களிலும் இவ்வாறான மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.