சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.


இப்படி, சர்ச்சை மேல் சர்ச்சை வெடித்து வரும் சூழலில், பயணி ஒருவர் குடித்துவிட்டு விமானக் குழுவினரிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சென்ற விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


விமான பயணிக்கு தலைக்கு ஏறிய போதை:


பல முறை எச்சரிக்கை விடுத்தபோதிலும் விமான குழுவினரிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 17ஆம் தேதி, கர்நாடகாவில் விமானம் தரையிறங்கிய பிறகு, 32 வயதான பயணி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.


இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இண்டிகோ நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பயணியைக் கைது செய்தோம். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்" என்றார்.


இதுதொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "6E 556 விமானத்தில் பயணித்த பயணி போதையில் இருந்ததால் அவருக்கு பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. விமான பணியாளர்களிடம் அவர் தவறாக நடந்து கொண்டார். அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக பயணி வந்தவுடன் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். மற்ற பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என குறிப்பிட்டுள்ளது.


தொடரும் சர்ச்சை:


கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி, விமான பயணி ஒருவர், விமான பணிப்பெண் மற்றும் சக பயணியின் அந்தரங்க புகைப்படத்தை எடுக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்ற விமானத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.


கடந்த ஜூலை மாதம், டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆண் பயணி ஒருவர், சக பெண் பயணியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அதுமட்டும் இன்றி, அந்த பெண் பயணியின் மகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது விமானத்தில் பயணிக்கும் பெண்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியது.