ராஜஸ்தானில் இருந்து கிளம்பிய விமானம், அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர், எமர்ஜென்சி கதவை திறக்க முயற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.


விமானத்தில் தொடரும் சர்ச்சை சம்பவங்கள்:


இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து இன்று காலை இண்டிகோ விமானம் பெங்களூரு செல்ல தயாராக இருந்தது. அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறினர். விமான குழுவினர், விமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினர்.


விமானம், காலை 10:10 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டது. ஆனால், திடீரென ஒரு பயணி, அவசரகால வெளியேறும் கதவைத் திறந்தார். இது, விமானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, விமானிகள் மற்றும் விமானக் குழுவினர் நிலையான பாதுகாப்பு நெறிமுறைகளை மேற்கொள்ள தொடங்கினர். குறிப்பிட்ட அந்த பயணி கைது செய்யப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் (சிஐஎஸ்எஃப்) ஒப்படைக்கப்பட்டார்.


திக் திக் சம்பவம்:


அவசரகால கதவை திறந்த பயணியின் பெயர் சிராஜ் கித்வாய். இவர், ஆக்ஸிஸ் வங்கியில் பணியாற்றி வருகிறார். தான் தற்செயலாக அவசரகால கதவை திறந்ததாகவும் விளக்கம் அளித்தார். அவசரகால கதவு திறக்கப்பட்டதும், விமானிக்கு நேரடிச் செய்தி அனுப்பப்பட்டது. பின்னர், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பயணியை விமானத்தில் இருந்து வெளியேற்றினர்.


இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட இண்டிகோ விமான நிறுவனம், "விமானத்தில் மற்ற பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் எங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை பராமரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்," என குறிப்பிடப்பட்டுள்ளது.


ஜோத்பூரில் உள்ள விமான நிலைய காவல் நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விமானம் புறப்பட 20 நிமிட தாமதம் ஏற்பட்டதால் விமானத்தில் பரபரப்பு காணப்பட்டது.