டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாள்கள் கூட இல்லாத நிலையில், தான் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்பதை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வெளிப்படையாக தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


வரும் பிப்ரவரி 5ஆம் தேதி, டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 நாள்கள் கூட இல்லாத நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


டெல்லி தேர்தல் களம்:


டெல்லியை பொறுத்தவரையில், சட்டமன்ற தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் இணைந்து களம் கண்ட ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ், சட்டமன்ற தேர்தலை தனித்தனியே சந்திக்கின்றன. இவர்களை தவிர மத்தியில் ஆளும் பாஜக இந்த இரண்டு கட்சிகளும் கடும் போட்டியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், தான் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என குறிப்பிட்டு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை செய்திருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.


சாதி சொல்லி வாக்கு சேகரிக்கும் கெஜ்ரிவால்:


பாலம், மத்தியாலா, பிஜ்வாசன் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட கெஜ்ரிவால், "விலையில்லா சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த பணம் எங்கிருந்து வரும் என்று கேட்கிறார்கள். நான் ஒரு பனியா (சாதி). வளங்களை எவ்வாறு நிர்வகிப்பது என்று எனக்குத் தெரியும். நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. எனக்கு கணிதம் தெரியும். நான் அதை ஏற்பாடு செய்வேன் (பணம்).


பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆம் ஆத்மி கட்சியின் நலத்திட்டங்களை நிறுத்த நினைக்கிறது. அரசுப் பள்ளிகள், மின்சாரம், பேருந்துப் பயணம் போன்ற இலவச வசதிகளை மூடுவதாக பாஜக கூறியுள்ளது. பள்ளிகளைக் கட்டும் ஆம் ஆத்மி கட்சி வேண்டுமா அல்லது அவற்றை மூடும் பாஜக வேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.


டெல்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மாதந்தோறும் ரூ. 25,000 மதிப்பில் பொதுமக்களுக்கு கட்சி நேரடி பலன்களை வழங்குகிறது. அதேசமயம் பாஜக தனது பணக்கார நண்பர்களுக்கு பொது நிதியைப் பயன்படுத்தி கடன்களை தள்ளுபடி செய்கிறது" என்றார்.