Fighter Jets Procurements: புதிய இலகுரக போர் விமானங்களை வாங்க, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்திடம் பாதுகாப்பு அமைச்சகம் டெண்டர் வழங்கியுள்ளது.


தேஜாஸ் போர் விமானங்கள் கொள்முதல்:


இந்திய விமானப் படைக்கு 97 தேஜாஸ் இலகுரக போர் விமானங்களை (எல்.சி.ஏ. எம்.கே.-1 ஏ) வாங்குவதற்காக, பொதுத்துறை ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் பாதுகாப்பு அமைச்சகம் டெண்டர் வழங்கியுள்ளது. அதற்கு பதிலளிக்க 3 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது. இதனை மத்திய அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  திட்டம் இறுதி உறுதி செய்யப்பட்டால், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட ராணுவ தளவாடங்களில் இந்திய ராணுவம் செய்யும் மிகப்பெரிய கொள்முதலாக இது இருக்கும். இந்த புதிய போர் விமானங்களின் கொள்முதலுக்கு சுமார் ரூ.67,000 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தேஜாஸ் போர் விமானங்களின் பயன்பாடு, அம்சங்கள்:




தேஜாஸ் போர் விமானங்கள் வான்வழிப் போர் மற்றும் தாக்குதல் விமான ஆதரவு பணிகளுக்கான ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகும். அதே நேரம் உளவு மற்றும் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் இது பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது.  தேஜாஸின் மல்டி-மோட் ஏர்போர்ன் ரேடார், ஹெல்மெட்-மவுண்டட் டிஸ்ப்ளே சிஸ்டம், ஒரு சுய-பாதுகாப்பு தொகுப்பு மற்றும் லேசர் பொசிஸன் பாட் ஆகியவற்றால் இதன் மல்டி-ரோல் திறன் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.


நவம்பரில், இந்திய விமானப்படைக்கு (IAF) மேலும் 97 தேஜாஸ் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்திற்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (டிஏசி) அனுமதி வழங்கியது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், இந்திய விமானப்படையின் Su-30 போர் விமானங்களை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுக்கும் DAC ஒப்புதல் அளித்தது. புதிய தேஜாஸ் விமானங்களின் கட்டுமானத்தில் 65 சதவிகிதம் முற்றிலும் உள்நாட்டு சாதனங்களை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு படையில் தேஜாஸ் விமானங்கள்:


பாதுகாப்பு அமைச்சகத்தின், 40 தேஜாஸ் மார்க் 1 போர் விமானங்களுக்கான (இரண்டு படைப்பிரிவுகள்) முந்தைய ஆர்டரை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனம் விரைவில் பூர்த்தி செய்ய உள்ளது. அதைத் தொடர்ந்து, 45,700 கோடி மதிப்பிலான 83 தேஜாஸ் மார்க் 1ஏ போர் விமானங்களுக்கு (நான்கு படைப்பிரிவுகள்) பிப்ரவரி 2021 இல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் வழங்கியது. அதன்படி, ஏற்கனவே ஆறு தேஜாஸ் ஸ்க்வாட்ரான்கள் ஆர்டர் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதியதாக ஐந்து ஸ்க்வாட்ரன்கள் (97 தேஜாஸ் மார்க் 1A) கூடுதலாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.  இது உள்நாட்டு தேஜாஸ் போர் விமானங்களின் எண்ணிக்கையை 11ஸ்குவாட்ரன்களாக உயர்த்துகிறது.


பாதுகாப்பு படையில் உள்ள மிக்-21 மற்றும் மிக்-27 இலகுர போர் விமானங்களுக்கான மாற்றாக, தேஜாஸ் விமானங்களை இந்தியா அதிகளவில் கொள்முதல் செய்து வருகிறது. அதேநேரம், பாகிஸ்தான் விமானப்படைக்காக அந்நாடு சீனா உடன் கைகோர்த்து, JF-17 தண்டர் எனப்படும் மலிவான மற்றும் இலகுரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் நூறுக்கும் அதிகமான JF-17 தண்டர் போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானப்படைய்ல் சேர்க்கப்பட்டுள்ளன.