ரயில் நிலையங்களில் புகையிலை மற்றும் பான் பராக் எச்சில் கறையை அகற்ற மட்டுமே ரயில்வே நிர்வாகம் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது.   


கழிவறை உட்பட ரயில் பெட்டிகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய பல்வேறு முயற்சிகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், ரயில் நிலையங்களில் புகையிலை மற்றும் பான் பராக் வெற்றிலை எச்சில் கறையை குறித்தும் அவ்வப்போது புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. கடினமாக பற்றிக்கொள்ளும் இந்தக் கறையை அகற்ற மட்டும் ரயில்வே துறை ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாயை செலவளிக்கிறது. இது தவிர பல கோடி லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது.


எனவே, பயணிகள் அலட்சிய போக்கால் ஏற்படும் இத்தகையான மோசமான நடவடிக்கைகளை சீர்செய்யும் நடவடிக்கைகளை தற்போது இந்திய ரயில்வே நிர்வாகம்  எடுத்துள்ளது.  




ரயில் நிலையங்களிலிருந்து வெளியேறும் போதும், ரயில் பெட்டிகளில் இருக்கும்போதும் பயணிகளுக்கு கை அளவில் உள்ள பிரத்யேக காகித பாக்கெட் வழங்க திட்டமிட்டுள்ளது. பான் பராக், வெற்றிலையின் எச்சிலைத் துப்பும் பழக்கம் உள்ளவர்கள் இதை வாங்கி பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்துவிட முடியும். எளிதில் மட்கி விடும் பொருளால் இது செய்யப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை எனவும் கூறப்படுகிறது.


கிளின் மை கோச்’ திட்டத்தில் ரயில் பெட்டிகளில் சுத்தப்படுத்தும் எந்த தேவை இருந்தாலும் பயணிகள் தங்களது மொபைல் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். மாற்றாக ஆண்ட்ராய்ட் செயலி அல்லது இணையபக்கம் மூலமாகவும் கோரிக்கை விடுக்கலாம். கிளீன் மை கோச் சேவை தற்போது கோச் மித்ரா வசதியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இது ரயில் பெட்டி தொடர்பான பயணிகளின் தேவைகளான தூய்மைப்படுத்துதல், தொற்று நீக்கம், விளக்கு வசதி, ஏர்கண்டிஷனிங் மற்றும் ரயில் பெட்டி கண்காணிப்பு போன்றவற்றை பதிவு செய்யும் ஒற்றை சாளர முறையாகும். கோச் மித்ரா வசதி 9000 இணை ரயில்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


மேலும், ரயில் நிலையங்களிலும் நின்றுக் கொண்டிருக்கும் ரயில்களிலும் தூய்மை பராமரிப்பு பணிகளை உறுதி செய்ய ஏ1 பிரிவு ரயில் நிலையங்களில் இளம் வயது நிலைய இயக்குநர்களை நியமிக்க ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்தது. 


வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடனான, மரியாதையுடன் கூடிய சிக்கல் இல்லாத சேவை;  ரயில் நிலையங்களிலும் நின்றுக் கொண்டிருக்கும் ரயில்களிலும் தூய்மை பராமரிப்பு;  ரயில் டிக்கெட் விற்பனை மற்றும் முன்பதிவு அலுவலகங்களின் சிறப்பான செயல்பாடு;  ரயில் நிலையங்களில் ரயில்களின் நேரம் தவறாமை, ரயில் நிலைய நடை மேடைகளில் உரிய நேரத்தில் ரயில் பெட்டித் தொடரை நிறுத்துவதும் விலக்கிக் கொள்வதும்  இவர்களின் செயல்பாடுகளாக இருக்கும். 

210 முக்கிய ரயில்களின் தூய்மையை மதிப்பீடு செய்ய மூன்றாவது நபர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.