ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். 


பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் நான்கு பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர். அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.


 






ஜம்மு -காஷ்மீரின் பூஞ்ச் ​​பகுதியில் 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பிறகு பயங்கரவாதிகளுடன் கடுமையான சண்டையில் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.


இன்று அதிகாலை, பாதுகாப்புப் படையினர் இரு பயங்கரவாதிகளையும் தனித்தனியாக என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.  ஜம்மு -காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் நடந்த சண்டையில், சமீபத்தில் ஷாகுண்டில் பொதுமக்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஒருவனை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதி இம்தியாஸ் அஹ்மத் தார் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான எல்இடி (டிஆர்எஃப்) உடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்டார். ஷாகுண்ட் பந்திபோராவில் சமீபத்தில் நடந்த பொதுமக்கள் கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பதாக ஐஜிபி காஷ்மீர் விஜய் குமார் கூறினார்.


 


கடந்த வாரம், ஜம்மு & காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் என்கவுண்டர் செய்தனர். இந்த சம்பவத்தின்போது, போலீஸ்காரர் ஒருவரும் காயமடைந்தார்.


முன்னதாக செவ்வாய்க்கிழமை, ஜம்மு -காஷ்மீரில் வெவ்வேறு சம்பவங்களில் மூன்று பொதுமக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். பந்திபோராவின் ஷாகுண்ட் பகுதியில் மொஹமட் ஷாஃபி லோன் என அடையாளம் காணப்பட்ட நபர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  வியாழக்கிழமை, யூனியன் பிரதேசத்தில் ஸ்ரீநகரைச் சேர்ந்த சுபிந்தர் கவுர் மற்றும் ஜம்முவைச் சேர்ந்த சந்த் உட்பட இரண்டு அரசு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.