ரயிலில் பயணம் செய்வது நம் நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கு பயன்படுத்தக்கூடிய பொதுவான பயணம். இதில், அவரவர் தேவையை பொறுத்து பெர்த், ஸ்லீப்பர் உள்பட பல்வேறு இருக்கைகளை தேர்ந்தெடுத்து கொள்கின்றனர்.
இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக ரயில்களில் அதிகரித்து வரும் பல்வேறு புகார்களின் அடிப்படையில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பல புதிய விதிமுறைகளை இந்திய ரயில்வே விதித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ரயில்வே வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியதாவது:
ரிசர்வ் பெட்டிகளில் பயணம் செய்யும் மக்கள் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை தான் உறங்க வேண்டும் என்றும் மற்ற நேரங்களில் மற்றவர்களுடன் இருக்கையை பகிர்ந்து கொண்டு, உட்கார்ந்து கொண்டு பயணம் செய்ய வேண்டும். பயணிகள் ரயிலில் ஏறியவுடன் தூங்க விரும்புவதால் உறக்கத்திற்கான நேரம் ஒரு மணி நேஅம் குறைக்கப்பட்டுள்ளது.
நடுத்தர பெர்த்தில் உள்ள நபர்கள் படுக்கையில் இருந்து கொள்ள தகராறு செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இதன் காரணமாகவே தூங்குவதற்கு குறிப்பிட்ட நேரத்தை இந்திய ரயில்வே விதித்துள்ளது.
அதேபோல் ரயிலில் சத்தமாக இசையைக் கேட்பதற்கும் தொலைபேசியில் பேசுவதற்கும் இந்த விதி பொருந்தும். தூங்கும் நேரத்தில் சத்தமாக தொலைபேசியில் பேசுவது, இயர்போன் இல்லாமல் இசை கேட்பது போன்ற பல புகார்கள் இந்திய ரயில்வேக்கு வந்ததையடுத்து இந்த விதி அமல்படுத்தப்பட்டது.
மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் இவை அனைத்தும் இருப்பதால் இதுபோன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பயண டிக்கெட் பரிசோதகர்கள்), கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் பிற ரயில்வே பணியாளர்கள் ரயில்களில் பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்காத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
மேலும், எந்த காரணமும் இல்லாமல் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவது சட்டப்படி குற்றம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ரயிலின் அலாரம் சங்கிலி அமைப்பு அவசர தேவைகளுக்கு மட்டுமே. ஒரு துணை, குழந்தை, முதியோர் அல்லது ஊனமுற்ற நபர் ரயிலைத் தவறவிட்டால், ரயிலில் விபத்து ஏற்பட்டாலோ அல்லது பிற அவசரநிலைகளின்போதும் மட்டுமே ரயிலில் சங்கிலியை இழுக்க அனுமதிக்கப்படுகிறது. ஓடும் ரயிலில் சங்கிலியை இழுக்க ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், சிறை தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை விதிப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது.