மாணவர்கள் மோதல்:


அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. காஷ்மீரை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஒருவரை காசிபூரை சேர்ந்த ஜூனியர் மாணவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் பேட்மிண்டன் விளையாடிய ஜூனியர் மாணவர்கள் சிலரை விளையாட்டை நிறுத்துமாறு காஷ்மீர் ஆராய்ச்சி மாணவர் கேட்டதையடுத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 


மோதலைத் தொடர்ந்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நுழைவுவாயில் மூடப்பட்டது. பல்கலைக்கழக பாதுகாப்பு குழுவினரும், காவல்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பு மாணவர்களும் மாவட்ட ஆட்சியரிடம் தத்தம் குறைகளைக் கூற ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.


காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல்


பல்கலைக்கழகத்தின் மாணவர் சர்தாஸ் ஹஃபீஸ் கூறுகையில், காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மீது சமீப காலமாக தாக்குதல் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதல் பற்றி ஏதும் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த தாக்குதல்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே நாங்கள் கோருகிறோம். மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.


கூடுதல் ஆட்சியர் சுதிர் குமார் நிகழ்விடத்திற்கு வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனையடுத்து நாளை டிசம்பர் 27ஆம் தேதி காஷ்மீர் மாணவர்கள் சார்பில் ஐந்து பேரும், காசிபூர் மாணவர்கள் சார்பில் ஐந்து பேரும் மாவட்ட ஆட்சியரை சந்திக்கின்றனர்.


முன்னதாக கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ராஜா மகேந்திர பிரதாப் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிட்டி பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்த மாணவர் ஒருவர் மாயமானார். மஸ்ரூர் அப்பாஸ் மிர் என்ற அந்த மாணவன்  காஷ்மீரை சேர்ந்தவர். காணாமல் போன சிறுவன் ராம்கட் சாலை ஏடிஎம்மில் பணம் எடுத்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் காஷ்மீரை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஒருவரை காசிபூரை சேர்ந்த ஜூனியர் மாணவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


உத்தரபிரதேசம்:


அலிகர் முசுலீம் பல்கலைக்கழகம் என்பது இந்தியாவில், உத்தரப் பிரதேசத்தின் அலிகார் நகரில் உள்ள பல்கலைக்கழகம். இசுலாமியர்களை இந்திய அரசுப் பொறுப்புகளை ஏற்க பழக்கப்படுத்தவும், இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் பயில பயிற்சி எடுக்கவும் தொடங்கப்பட்டது. மலப்புறம், முர்சிதாபாத் ஆகிய நகரங்களில் கிளைகள் உள்ளன.


கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பெரியளவில் போராட்டங்கள் நடந்தன. மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த சம்பம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது நினைவு கூரத்தக்கது.