ஊழல், தேசிய பாதுகாப்பு, பொருளாதார நிலை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து பாஜக ஆட்சி அமைத்தது. மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து வரும் மே மாதத்துடன் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. இந்த 10 ஆண்டுகளில் இந்திய பிரதமர் மோடி, ஒரு செய்தியாளர் சந்திப்பு கூட நடத்தாமல் இருந்திருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.


10 ஆண்டுகளாக செய்தியாளர் சந்திப்பு நடத்தாத பிரதமர் மோடி:


குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க மறுக்கிறார்? பொம்மை பிரதமராக உள்ளார் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது பாஜக கடும் குற்றச்சாட்டை முன்வைத்தது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பல்வேறு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர் மன்மோகன் சிங்.


மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் பிரதமரின் தகவல் தொடர்பு ஆலோசகராக பதவி வகித்த பங்கஜ் பச்சௌரி நேற்று, இதுகுறித்து குறிப்பிடுகையில், "இந்தியப் பிரதமரின் கடைசி செய்தியாளர் சந்திப்பு சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு இன்றுதான் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய 62 கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளித்தார்" என்றார்.


மேற்குறிப்பிடப்பட்ட செய்தியாளர் சந்திப்பை நடத்தியவர் மன்மோகன் சிங். அப்போது, தனது ஆட்சி காலத்தின் சாதனைகள் குறித்தும் தோல்விகள் குறித்தும் வெளிப்படையாக பதில் அளித்தார். பொது தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த தோல்விகள் குறித்தும் உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு குறைந்து வருவது குறித்தும் மன்மோகன் சிங் பதில் அளித்திருந்தார்.


 முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் செய்த சம்பவம்:


இந்த செய்தியாளர் சந்திப்பு, கடந்த 2014 ஆண்டு, ஜனவரி 3ஆம் நடந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பிரதமரால் ஒரு செய்தியாளர் சந்திப்பு கூட நடத்தப்படவில்லை. செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்க பிரதமர் மோடி மறுக்கும் நிலையிலும், கடந்த 2023ஆம் ஆண்டு, அமெரிக்கா சென்றிருந்தபோது, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார்.


பங்கஜ் பச்சௌரியின் பதிவை மேற்கோள் காட்டி பேசிய காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி, "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால ஆட்சியில் 117 முறை பத்திரிகையாளர்களுடன் உரையாடியுள்ளார்" என குறிப்பிட்டுள்ளார்.