மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான்.
கைதாகிறாரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்?
பண மோசடி வழக்கில் டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்தர் ஜெயின், டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவை தொடர்ந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவார் என கடந்த சில நாள்களாகவே தகவல் வெளியான வண்ணம் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
ஆனால், மூன்று முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. மாநிலங்களவை தேர்தல், குடியரசு தின தயாரிப்பு பணிகள் காரணமாக தன்னான் நேரில் ஆஜராக முடிவில்லை என அமலாக்கத்துறை துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதினார்.
முதலமைச்சர் வீட்டில் குவிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள்:
இந்த நிலையில், டெல்லியில் அமைந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன என்றும் அவரின் வீட்டில் ரெய்டு நடத்தி கெஜ்ரிவாலை கைது செய்வதற்காக வாயில்களில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கெஜ்ரிவால் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டதற்கு விளக்கம் அளித்த டெல்லி காவல்துறை தரப்பு, "கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தி அவர் கைது செய்யப்படுவார் என ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கூற தொடங்கியதில் இருந்தே, முதலமைச்சர் வீட்டில் பத்திரிகையாளர்கள் குவிந்து வருகின்றனர். அவர்களை கையாள்வதற்காக முதலமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" என்றனர்.
இதுகுறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் ஒருவர், "முதலமைச்சர் இல்லத்திற்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டு, அனைத்து நுழைவு/வெளியேறும் வாயில்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் இல்லத்தில் பணியமர்த்தப்பட்டிருந்த ஊழியர்கள் உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.
டெல்லி அமைச்சர் அதிஷி மர்லேனா, இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிடுகையில், "அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை சோதனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கைது செய்ய வாய்ப்புள்ளது" என்றார்.
இந்த விவகாரத்தில் பாஜகவை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பிய கெஜ்ரிவால், "கடந்த இரண்டு ஆண்டுகளில் மதுபானக் கொள்கை ஊழல் பற்றி நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் பாஜகவின் அனைத்து ஏஜென்சிகளும் பல ரெய்டுகளை நடத்தி பலரை கைது செய்தாலும் ஒரு பைசா கூட ஊழலை கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில் ஊழல் நடந்திருந்தால், அத்தனை கோடிகளும் எங்கே போயின? பணமெல்லாம் காற்றில் காணாமல் போய்விட்டதா? என்றார்.