இந்தியாவை பொறுத்தவரை, முக்கியமான போக்குவரத்து சேவையாக விமான சேவை கருதப்படுகிறது. பேருந்து, ரயிலுக்கு அடுத்தப்படியாக அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாக விமான சேவை உள்ளது. அதிக தூரமான இடங்களுக்கு செல்ல மக்கள் தேர்வு செய்யும் முதன்மையான சேவையாக விமான சேவை இருக்கிறது.
குறைகிறது விமான டிக்கெட் விலை:
ஆனால், விமான டிக்கெட் கட்டணம் அதிகம் இருப்பதால் அடித்தட்டு மக்களால் அதனை பயன்படுத்த முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 3 மாதங்களாக விமான விசையாழி (டர்பைன்) எரிபொருளின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், பயணிகளிடம் வசூலிக்கப்படும் எரிபொருளுக்கான கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்ய உள்ளது. எனவே, விமான டிக்கெட் கட்டணம் குறைய உள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையை பொறுத்தவரையில் ஏகபோகமான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது இண்டிகோ. இந்தியாவில் இயக்கப்படும் 63.4 சதவீத உள்நாட்டு விமானங்கள், இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமானவை. பயண தூரத்தின் அடிப்படையில் 1,000 ரூபாய் வரை எரிபொருள் கட்டணத்தை பயணிகளிடம் இருந்து இண்டிகோ விமான நிறுவனம் வசூலித்து வருகிறது.
விமான டிக்கெட் கட்டண குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள இண்டிகோ நிறுவனம், "விமான விசையாழி (டர்பைன்) எரிபொருள் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபர் மாதம், எரிபொருள் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, விமான எரிபொருள் விலை குறைந்துள்ளதை தொடர்ந்து, அந்த கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் திரும்பப் பெறுகிறது" என குறிப்பிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் விமான எரிபொருள் விலை சரிவை சந்தித்து வருகிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, டெல்லியில் விமான விசையாழி எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு 1.182 லட்சம் ரூபாயாக இருந்தது. இந்த ஜனவரி 1ஆம் தேதிக்குள், ஒரு கிலோ லிட்டர் 1.012 லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது.
அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட இண்டிகோ நிறுவனம்:
இதுகுறித்து விளக்கம் அளித்த இண்டிகோ நிறுவனம், "விமான எரிபொருள் விலை மாறும் தன்மை கொண்டுள்ளது. விலை மற்றும் சந்தை நிலவரங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப விமான டிக்கெட் கட்டணங்களையும் மாற்றி அமைப்போம். வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில், சரியான நேரத்தில், கண்ணியமான, தொந்தரவு இல்லாத பயணத்தை வழங்குவதில் இண்டிகோ உறுதியாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
இன்று முதல் முன்பதிவு செய்யப்படும் அனைத்து டிக்கெட்டுகளுக்கும் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை இண்டிகோ விமான நிறுவனம் ரத்து செய்ய உள்ளது. ஆனால், ஜனவரி 4 ஆம் தேதிக்கு முன் எந்த தேதியில் பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்தாலும், விமான எரிபொருள் கட்டணம் பொருந்தும். அவர்களுக்கு பணம் திருப்பி தர மாட்டாது.
இந்திய விமான நிறுவனங்கள் வசூலிக்கும் விமான டிக்கெட் கட்டணத்தில் 45 சதவிகிதம் விமான எரிபொருள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 500 கிமீ வரை பயணிக்கும் விமானங்களுக்கு 300 ரூபாயும், 501 முதல் 1,000 கிலோமீட்டர் வரையிலான விமானங்களுக்கு 400 ரூபாயும் எரிபொருள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.