தொழில்நுட்பக் கோளாறால், கோவா கடல்பகுதியில் வழக்கமான பயணத்தின்போது இந்தியப் போர் விமானம் விபத்திற்குள்ளானது.
போர் விமானம் விபத்து
கோவா கடலோரப்பகுதியில் இன்று இந்திய கப்பல்படையின் மிக் 29K ரக போர் விமானம் வழக்கமான பயிற்சி பயணத்தை மேற்கொண்டது. அப்போது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததால் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகவும் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படை விமானியை உயிருடன் மீட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி, விமானியின் உடல்நிலை சீராக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
கடற்படை ட்வீட்
இந்த சம்பவம் கடற்படையால் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "கோவாவிற்கு அப்பால் கடலில் வழக்கமான பயணத்தில் ஈடுபட்டிருந்த MiG 29K விமானம் தளத்திற்குத் திரும்பும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விபத்திற்குள்ளானது. விமானி பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளார். விரைவாக செய்யப்பட்ட SAR ஆபரேஷன் நடவடிக்கைக்கு பிறகு மீட்கப்பட்டார். விமானியின் உடல்நிலை தற்போது சீரான நிலையில் இருப்பதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது," என்று இந்திய கடற்படை ட்வீட் செய்தது.
விசாரணை வாரியம் அமைப்பு
இந்த சம்பவத்தின் காரணத்தை ஆராய விசாரணை வாரியம் (BoI) நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில், இதுவும் கடுமையான வானிலையின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும் விசாரணை வாரியம் விசாரணையை தொடங்கி உள்ள நிலையில் கூடிய விரைவில் இதற்கான காரணம் தெரிய வரும். கடந்த வார தொடக்கத்தில், சீன எல்லையில் உள்ள இந்தியாவின் இறுதிப் புறக்காவல் நிலையங்களில் ஒன்றான தவாங்கில் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டரின் விமானி ஒருவர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தொடரும் ஹெலிகாப்டர் விபத்துக்கள்
"தவாங் அருகே முன்னோக்கி பகுதியில் பறந்து கொண்டிருந்த ராணுவ விமானச் சீட்டா ஹெலிகாப்டர் அக்டோபர் 05 அன்று காலை 10 மணியளவில் வழக்கமான பயணத்தின்போது விபத்துக்குள்ளானது. இரண்டு விமானிகளும் அருகிலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்” என்று இராணுவ மக்கள் தொடர்பு அலுவலகம் அப்போது வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. பின்னர், இறந்த விமானி லெப்டினன்ட் கர்னல் சவுரப் யாதவ் என்று ஆதாரங்கள் அடையாளம் காணப்பட்டன. சமீபத்திய ஆண்டுகளில், அருணாச்சலப் பிரதேசத்தில் பல ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. இந்த விபத்துகளில் பெரும்பாலானவற்றுக்கு கடுமையான வானிலையே முதன்மைக் காரணம். வடகிழக்கு மாநிலத்தில் 6 ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் 2010ல் இருந்து கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே ராணுவத்தின் இரண்டாவது சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானி உயிரிழந்ததுடன், துணை விமானிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.