இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட்டது தொடர்பாக அல்ஜசீரா செய்தி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ரிப்போர்டர்ஸ் கலக்டிவ் என்னும் அமைப்பு ஆர்டிஐ மூலம் சில தகவல்களை சேகரித்துள்ளது. அந்த தகவல்களை வைத்து இந்த சிறப்பு புலனாய்வு கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
அதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு ரிசர்வ் வங்கியின் மீது மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் சிலர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அதாவது ரிசர்வ் வங்கி தன்னுடைய நிதி கொள்கையில் மாற்றங்கள் செய்யாமல் இந்திய தொழில்களை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக அதில் சுட்டுக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் பணவீக்க நிலை குறைவாக இருந்த போதும் ரிசர்வ் வங்கி தன்னுடைய நிதி கொள்கையில் கடன் வட்டி விகித்தை குறைக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. மேலும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முடிவுகள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
2014ஆம் ஆண்டு இந்தியாவில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. இதனால் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிதி கொள்கை தொடர்பாக ஒரு புதிய அமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டது. அந்த அமைப்பு ரிசர்வ் வங்கியுடன் இணைந்து நிதி கொள்கையை நிர்ணயிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு இந்த அமைப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் உடன் மத்திய நிதி அமைச்சகம் ஒரு ஒப்பந்தம் செய்தது. அதன்பிறகு 2016ஆம் ஆண்டு நிதி கொள்கை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் 3 பேரை மத்திய அரசு நியமிக்கும் வகையில் அமைந்தது.
2016ஆம் ஆண்டு ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகிய பிறகு உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டார். அவரும் ரிசர்வ் வங்கியின் முடிவுகளில் மத்திய அரசு தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி கடிதம் ஒன்றை ஆளுநர் உர்ஜித் பட்டேல் எழுதியுள்ளார். அதில்,“எங்களுடம் நீங்கள் இந்த விவாகரம் தொடர்பாக விவாதிக்கவில்லை. மேலும் நிதி கொள்கை குழுவிலுள்ள ரிசர்வ் வங்கி மற்றும் பிற நபர்களிடம் தனித்தனியே கூட்டம் நடத்தியது தவறு. மேலும் இது ரிசர்வ் வங்கி சட்டத்தை மீறும் வகையில் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
அவரின் இந்தக் கடிதம் தொடர்பாக அப்போது பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக இருந்த சக்திகாந்த தாஸ் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். அதில் மத்திய நிதியமைச்சகத்தின் அதிகாரிகள் நிதி கொள்கை குழு உறுப்பினர்களை சந்தித்தது எந்தவகையிலும் ரிசர்வ் வங்கி சட்டத்திற்கு இடையூறாக இருக்காது என்று கூறியிருந்தார். மத்திய அரசின் தொடர் தலையீடு காரணமாக 2018ஆம் ஆண்டு உர்ஜித் பட்டேல் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக அப்பதிவியிலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் சக்திகாந்தா தாஸ் அடுத்த ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்