இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த  சில மாதங்களுக்கு முன்புதான் நடைபெற்று முடிந்தது. மக்களவைத் தேர்தல் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்கள்  மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. 


இன்று தேர்தல் தேதி அறிவிப்பு:


இதையடுத்து, அதற்கான தேர்தல் தேதிகள் இன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது. இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கருதப்படுகிறது.  நாட்டின் மிகப்பெரிய பொருளாதார மாநிலங்களில் ஒன்றாக திகழும் மகாராஷ்ட்ராவில் தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது. அவர்களின் ஆட்சி நடப்பாண்டில் நவம்பர் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது.


மேலும், ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. அவர்களின் ஆட்சிக்காலம் வரும் நவம்பர் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதேபோல, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்களின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது.


காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்:


இதனால், மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று இந்த இரு மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், நீண்ட வருடங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாமல் உள்ள ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீர் மாநிலத்தில் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் சட்டசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இதனால், காஷ்மீருக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஜார்க்கண்ட் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 


பா.ஜ.க.வுக்கு சவால்:


தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்கள்  மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் அந்தந்த மாநில கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பெரும் சரிவைச் சந்தித்து கூட்டணி கட்சிகள் உதவியுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ள பா.ஜ.க.விற்கு இந்த சவால் பெரும் சவாலாக அமைந்துள்ளது. ஏனென்றால், சமீபத்தில்  பல மாநிலங்களில் நடைபெற்று முடிந்த 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் பெரும்பாலான இடங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றிருந்தது. இது பா.ஜ.க.விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.