இந்தியாவின் கல்வித் துறையும், ஆன்லைன் கல்வியையும் சீர்குலைக்கும் வகையில், இணையதள சைபர் தாக்குதல் நடப்பதற்கான அபாயம் அதிகமாகி இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த 3 மாதங்களில் இந்த தாக்குதல் 20 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.


ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிர்வாக அமைப்பு ஒன்று, கல்வி நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இது தொடர்பாக அந்த நிறுவனம், ‘உலக கல்வித்துறைக்கு இணையதள அச்சுறுத்தல்,’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.



அந்த நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "கொரோனா வைரஸ் காலத்தில் கல்வி நிறுவனங்கள் 'ஆன்லைன்' வாயிலாக பாடங்களை நடத்தின. இந்நிலையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் அது தொடர்பான ஆன்லைன் தளங்கள் மீதான சைபர் குற்றம் எனப்படும் இணைய வழித் தாக்குதல் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தோனேசியா, பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, இணையதள தாக்குதல்களின்  அடுத்த மிகப்பெரிய இலக்காக, இந்திய கல்வி நிறுவனங்களும், ஆன்லைன் கல்வி தளங்களும் உள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் இணைய வழித் தாக்குதல், 20 சதவீதம் அதிகரித்துள்ளது.


கடந்தாண்டில் பதிவான இணைய வழி தாக்குதல்களில் இந்தியாவிலேயே மிகவும் அதிகமான அளவு நடந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தோனேஷியா, பிரேசில் ஆகியவை அதற்கடுத்த இடங்களில் உள்ளன. குறிப்பாக, ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்ட இணைய அச்சுறுத்தல்களில் 58 சதவீதம், இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களை குறி வைத்து நடத்தப்பட்டுள்ளது. இதில் பைஜூஸ், ஐஐஎம் கோழிக்கோடு, தமிழ்நாடு தொழிற்கல்வி இயக்குனரகம் ஆகியவையும் அடங்கும். இதற்கு அடுத்த இடத்தில் 10 சதவீத இணையதள தாக்குதல் அச்சுறுத்தலுக்கு இந்தோனேசியா இலக்காகி உள்ளது.


வளரும் நாடுகளில் அதிகரித்து வரும் கல்வி தொழில்நுட்ப சந்தை, மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் ஊடுருவல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த இணையதள தாக்குதல் நடத்தப்படுகிறது. எனவே, இணையதள தாக்குதல் குற்றவாளிகள் கல்வித்துறையில் உள்ள நிறுவனங்களை நோக்கி படையெடுப்பதில் ஆச்சரியமில்லை.", இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



தொழில் நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க அதைப்பயன்படுத்தி இணைய வழியில் திருடுபவர்களும் அதிகரித்து வருகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுபவது இந்திய கல்வித்துறைதான். காரணம், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களால் பள்ளிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும், ஆராய்ச்சிப் படிப்புகளுக்கும் மாணவர்களால் நேரடியாகச் செல்ல முடியவில்லை. ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படுவதால் மாணவர்கள் வீட்டிலிருந்தே படித்து வருகின்றனர்.


பணிச்சூழலும் ஒர்க் ப்ரம் ஹோம் என்றாகி விட்டது. கல்வியிலும் வேலையிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது கொரோனா வைரஸ். நாடு முழுவதும் பல்வேறு கல்வி அமைப்புகளும், நிறுவனங்களுக்கும் இந்தப் பெருந்தொற்றுக் காலத்துக்கு ஏற்பத் தங்களின் கட்டமைப்பையும் மாற்றிக்கொண்டனர். இதன் பயன்பாடு அதிகமாவதன் காரணமாக குற்றங்களும் கூடவே அதிகரித்து வருவதால் இதனை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்காக இந்தியா மற்றும் சில நாடுகளை எச்சரித்துள்ளது இந்த அறிக்கை.