தன்னுடைய படத்தை சூதாட்ட விடுதியின் விளம்பரத்தில் பயன்படுத்தியதால் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளார். கோவாவைச் சேர்ந்த சூதாட்ட விடுதி ஒன்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் படத்தை மார்ஃபிங் செய்து பல்வேறு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. இதனைக் குறித்து விளக்கம் தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், இதுபோன்ற விளையாட்டுகளைத் தான் விளம்பரப்படுத்தவில்லை எனவும், தன்னுடைய வழக்கறிஞர் குழுவினர் இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். எனினும், மும்பையின் பாந்த்ரா காவல் நிலையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது.


சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது படம் சூதாட்ட விடுதியின் விளம்பரத்திற்குப் பயன்படுத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், `சமூக வலைத்தளங்களில் என்னுடைய மார்ஃப் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று நான் சூதாட்ட விடுதியை விளம்பரப்படுத்துவதாகப் பல்வேறு விளம்பரங்கள் காட்டப்பட்டு வருவதாக என்னுடைய கவனத்திற்கு வந்துள்ளது. என் அளவில் இருந்தபடி, நான் புகையிலை, மது, சூதாட்டம் முதலானவற்றை நேரடியாகவோ மறைமுகமாகவோ விளம்பரப்படுத்துவதில்லை. இதுபோன்று மக்களைத் தவறாக வழிநடத்த என் படம் பயன்படுத்தப்படுவது எனக்கு வலியைத் தருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். 



மேலும், இந்த விவரங்களைப் பொதுவில் பகிர்வது முக்கியம் எனத் தான் கருதியதால் அதனைப் பகிர்ந்ததாகக் கூறியுள்ள சச்சின் டெண்டுல்கர், தனது வழக்கறிஞர் குழு இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். எனினும், மும்பை காவல்துறை, சைபர் க்ரைம் துறை ஆகியோருக்கு இதுகுறித்து எந்தப் புகாரும் வழங்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. தன்னுடைய படத்தைத் தவறாக விளம்பரத்திற்காக பயன்படுத்தியது குறித்து சச்சின் டெண்டுல்கரின் அலுவலகத்தில் இருந்து கோவாவைச் சேர்ந்த சூதாட்ட விடுதிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 






சமீபத்தில் மும்பை காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் பிறரின் படங்களை மார்ஃபிங் செய்ததாக மொத்தமாக 118 வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனினும் அவற்றில் 36 படங்களின் குற்றவாளிகள் மட்டுமே சிக்கியுள்ளனர். கடந்த மாதம் சுமார் 94 காவல் நிலையங்களில் இதே போன்ற 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை ஒரு குற்றவாளி மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.