இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான பைச்சுங் பூட்டியா, சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎஃப்) கட்சியில் சேர உள்ளார். கடந்த ஒரு வார காலமாக, இவர் எந்த கட்சியில் சேர போகிறார் என்பது அம்மாநில அரசியலில் பெரிய கேள்வியாக இருந்து வந்தது. இது தொடர்பாக பல்வேறு விதமான ஊகங்கள் வெளியான வண்ணம் இருந்தது.


சிக்கிம் ஜனநாயக கட்சியில் இணையும் முன்னாள் கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியா:


இச்சூழலில், சிக்கிம் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணியில் பைச்சுங் பூட்டியா இணைய உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு, ஹம்ரோ சிக்கிம் கட்சியை (HSP) தொடங்கிய பைச்சுங் பூட்டியா, 2019 சட்டப்பேரவை தேர்தலில் களம் கண்டார். கட்சியின் முகமாக அவர் பார்க்கப்பட்டாலும், பெரிய தலைவர்கள் யாரும் இல்லாததால் ஒரு இடத்தில் கூட அவரது கட்சி வெற்றிபெறவில்லை.


அடுத்தாண்டு மக்களவைுயுடன் சிக்கிம் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், பைச்சுங் பூட்டியா, முக்கிய அரசியல் நகர்வை மேற்கோண்டுள்ளார்.


சிக்கிம் ஜனநாயக கட்சியில் சேர்வது குறித்து பேசிய அவர், "ஹம்ரோ சிக்கிம் கட்சியை சிக்கிம் ஜனநாயக முன்னணியில் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இறுதி முடிவு எடுப்பதற்கு முன் மற்ற கட்சி தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.


பைச்சுங் பூட்டியாவின் அரசியல்:


இன்னும் சில தலைவர்கள் சந்திக்க உள்ளேன். இரு கட்சிகளின் இணைப்பு உடனடியாக நடக்காது. அதற்கு காலம் எடுக்கும். சிக்கிம் ஜனநாயக முன்னணியில் சேர்வதற்கோ அல்லது இணைவதற்கோ நான் இன்னும் தேதியை நிர்ணயிக்கவில்லை. அது முழுமையான பேச்சுவார்த்தைக்கு பிறகு நடக்கும்" என்றார்.


கடந்த தேர்தலில், ஆளும் சிக்கிம் புரட்சிகர முன்னணிக்கு பைச்சுங் பூட்டியா ஆதரவு தெரிவித்தார். 2019 தேர்தலுக்கு முன்னதாக முதலமைச்சர் பிரேம் சிங் கோலேவை சந்தித்து பேசினார். அதன் பின்னர், சிக்கிம் புரட்சிகர முன்னணிக்கு எதிராக தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.


இது தொடர்பாக பேசிய அவர், "2019 இல் பிரேம் சிங் கோலே அளித்த வாக்குறுதியை நாங்கள் அனைவரும் ஆதரித்தோம். சிக்கிம் புரட்சிகர முன்னணி, பலவீனமான வேட்பாளர்களைக் களம் இறங்கிய தொகுதிகளில் நாங்கள் தந்திரமாக வேட்பாளர்களை நிறுத்தினோம். எஸ்.கே.எம் விரும்பியதைப் போலவே மாற்றத்தை நாங்கள் விரும்பினோம். 


இருப்பினும், இந்த 4 ஆண்டுகளில், கோலே மற்றும் எஸ்கேஎம் கீழ் மாற்றம் எதுவும் நடக்கவில்லை. கடந்த 25 ஆண்டுகால ஆட்சியில் சிக்கிம் ஜனநாயக கட்சியை அழித்த ஊழல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இப்போது சிக்கிம் புரட்சிகர முன்னணியில் நிறைந்துள்ளனர்" என்றார்.


32 தொகுதிகளை சிக்கிம் சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணிக்கு 19 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. சிக்கிம் புரட்சிகர முன்னணி, தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக உள்ளது.